மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

சிறப்புக் கட்டுரை: நலிந்துவரும் அரக்கு சாகுபடி!

சிறப்புக் கட்டுரை: நலிந்துவரும் அரக்கு சாகுபடி!

ஜி.சிங்

(தமிழ்நாட்டில் நகைத் தொழில் உள்ளிட்டப் பல்வேறு தொழில்களுக்கு அரக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரக்கு எங்கிருந்து உற்பத்தியாகிறது, எப்படி உற்பத்தியாகிறது என்று பலர் அறிந்திருக்க மாட்டோம். இதுகுறித்த ஒரு கட்டுரையைக் காண்போம்.)

அரக்கு உற்பத்தி என்பது இந்தியாவில் நீண்ட காலமாக நடந்துவரும் ஒரு தொழிலாகும். பல ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதுகுறித்த சிறு தொகுப்பைக் காண்போம்.

ஹரிதாஸ் ரவி இப்போதெல்லாம் கவலையோடுதான் உள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சிரமத்தோடு அரக்கு உற்பத்தி செய்வதை விட்டு வெளியேறினார். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மாவட்டத்தின் சாரிடா கிராமத்தில் அரக்குப் பூச்சி வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். இந்தக் கிராமம் மேற்கு வங்கத் தலைநகரான கொல்கத்தாவிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அரக்குக் குச்சிகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டுதான் இவர் தனது மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்தார்.

ஒருகட்டத்தில் அரக்குக் குச்சிகளின் விலை சரியத் தொடங்கியதால் போதிய வருவாய் கிடைக்காமல் தடுமாற்றம் ஏற்பட்டது. அறுபது வயது நிரம்பிய இவர் தற்போது கிராமத்தில் ஒரு சிறிய மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தக் கிராமத்தில் இவர்களுடைய மூதாதையர்கள் காலத்திலிருந்தே அரக்கு உற்பத்தி நடந்து வருகிறது. முந்தைய காலத்தில் அரக்கு உற்பத்தி மூலம் நல்ல வருவாயும் கிடைத்துள்ளது. "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல வருவாய் கிடைத்தது. ஆனால், இப்போது இல்லை. என் வீட்டில் அடுப்பு எரிய வேண்டுமே, அதனால்தான் சிறியதாக ஒரு மளிகைக் கடை வைத்துக் கொண்டேன்" என்று வேதனையாகக் கூறுகிறார் ராய்.

விலைச் சரிவு மட்டுமே இதற்குக் காரணமில்லை. காலநிலை மாற்றமும் இந்தத் தொழிலை விட்டு வெளியேறுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார் ராய். "கடந்த ஆண்டில் அரக்கு உற்பத்தி குறைந்துவிட்டது. பருவ மாற்றங்களால் அரக்கு உற்பத்தி செய்வதற்கான சூழல் இந்த மாவட்டத்தில் குறைந்து வருகிறது. நீண்ட காலத்திற்கு இந்தச் சூழ்நிலைகளைக் கொண்டு இங்கு அரக்கு உற்பத்தி செய்வது இயலாமல் போய்விடும். வேகமாக வெப்பநிலை மாறி வருகிறது. தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிக்கொல்லிகளாலும் இதன் உற்பத்தி பாதிக்கும்" என்கிறார் ராய்.

ஒருகாலத்தில் புருலியா மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக அரக்கு உற்பத்தி இருந்துள்ளது என்பது அவர் கூறுவதிலிருந்தே தெரிகிறது. 2012ஆம் ஆண்டில் ஒரு கிலோ அரக்கு 1,000 ரூபாயாக இருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில் கிலோ 100 ரூபாயாகச் சரிந்துவிட்டது. இதனால் இடைத்தரகர்கள் தலையீட்டைக் குறைக்க வேண்டுமென்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்குக் கோரிக்கை வைக்கின்றனர். 1950ஆம் ஆண்டில் அரக்கு உற்பத்தி ஆண்டுக்கு 42,000 டன்களாக இருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டில் 17,000 டன்களாகச் சுருங்கிவிட்டது. இதே காலகட்டத்தில் ஏற்றுமதியும் 29,000 டன்களிலிருந்து 6,600 டன்களாகக் குறைந்துவிட்டது.

அரக்கு உற்பத்திக்கு இந்தியாவில் நீண்டகால வரலாறு உண்டு. நாட்டின் மொத்த அரக்கு உற்பத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் சரிபாதி அளவுக்கு உற்பத்தியாகிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் எஞ்சிய பாதி அரக்கு உற்பத்தியாகிறது. உற்பத்தி செய்யப்பட்ட அரக்கைச் செயலாக்கம் செய்யும் பணிகளில் மேற்கு வங்கம் முன்னிலை வகிக்கிறது. 44 விழுக்காடு அரக்குப் பொருட்கள் மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 183 அரக்குப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இதில் சரிபாதி புருலியாவில்தான் உள்ளது.

அரக்கு என்பதை ஆங்கிலத்தில் லேக் என்று அழைப்பார்கள். இது லக்சா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது. பண்டைய காலம் தொட்டே அரக்கின் பயன்பாடும் இருந்துகொண்டே வருகிறது. 16ஆம் நூற்றாண்டில் அய்ன்-அய்-அக்பரி திரைகளுக்கு அரக்கு பூசியுள்ளார் என்று வரலாறுகள் கூறுகின்றன. அதேபோல கிரேக்கத்திலும், ரோமனிலும் கூட அரக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 1900களில் அரக்கு உற்பத்தியை மேம்படுத்தப் பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடியின மக்களை ஊக்குவித்தது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிர்சாபூரிலிருந்து புருலியாவுக்கு குடியேறி அரக்கு தயாரிப்பு ஆலைகளைத் தொடங்கினர். பல்ராம்பூர் மற்றும் ஜால்தாவில் ஆலைகளின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்தது. அரக்கு சாகுபடி செய்பவர்கள் பெரும்பாலும் பழங்குடியினராகத்தான் இருந்தனர். இப்போதும் கூட அரக்கு சாகுபடி செய்பவர்களில் பழங்குடியினர்தான் மிக அதிகம். உலகில் தாய்லாந்துக்கு அடுத்து அரக்கு உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. மேற்கு வங்கத்தின் புருலியா, பங்குரா, மித்னாபூர், மர்சிதாபத் மற்றும் மால்டா ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டும் 115 ஆலைகள் வரை உள்ளன. இதில் புருலியாவில் உள்ள பல்ராம்பூரில் மட்டும் 100 யூனிட்டுகள் வரை உள்ளன. இங்கு ஆண்டொன்றுக்கு 6,600 டன் அளவிலான அரக்கு தயாரிக்கப்படுகிறது. இங்கு மட்டும் 20,000 பேர் இதைச் சார்ந்து வர்த்தகம் செய்கின்றனர்.

அரக்குப் பூச்சிகள் மரக் கிளைகளில் ஒட்டி முட்டைகள் இடுகின்றன. இந்த முட்டைகள் அரக்குப் பூச்சிகளை உருவாக்குகின்றன. இவ்வாறு பல்வேறு அரக்குப் பூச்சிகள் இணைந்து அரக்கு உற்பத்தியாகிறது. இது பெரும்பாலும் கும்பாதிரி, பலா, இலந்தை உள்ளிட்ட மரங்களில்தான் உற்பத்தியாகிறது. மரக்கிளையிலிருந்து அரக்கு எடுக்கப்பட்ட பூச்சிகள் மற்றும் மாசுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

மின் கருவிகள், வளையல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும் அரக்கு பயன்படுகிறது. அதுமட்டுமின்றி பாரம்பரிய நாட்டுப்புற மருந்துகள், நகைகள் தயாரிப்பிற்கும் அரக்கு பயன்படுகிறது. ஆனாலும் இத்தொழிலை ஊக்குவிக்க அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரக்கு தயாரிப்பு ஆலைகளும் கூட இப்போது இத்தொழிலில் மகிழ்வோடு ஈடுபடவில்லை. பல்ராம்பூரைச் சேர்ந்த ரஞ்சித் மஜ்ஹி என்ற ஆலை உரிமையாளர் கூறுகையில், "உற்பத்திச் செலவுகளும், ஊழியர்களுக்கான ஊதியமும் அதிகரித்து வருகிறது. இதனால் லாபம் குறைந்துகொண்டே வருகிறது. எங்களுக்கு உதவ உரிய முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். அரக்குக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும்" என்கிறார்.

அரக்கு உற்பத்தியாளர்களுக்கு வங்கிகளும் கடன் அளிக்க மறுக்கின்றன. உரிய நேரத்தில் அவர்களால் திருப்பிச் செலுத்த இயலாததே இதற்குக் காரணமென்றும் அவர் கூறுகிறார். அதேபோல காடுகள் அழிப்பு பெருமளவில் மேற்கு வங்கத்தில் அரங்கேறுவதால் அரக்கு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள வர்த்தகர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மூலப்பொருள் கிடைப்பதில் உள்நாட்டுச் சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதால் ஏற்றுமதியும் தடுமாறி வருவதாக அனுப் அகர்வால் என்ற ஏற்றுமதியாளர் கூறுகிறார். இவர் அரக்கு ஏற்றுமதி கமிட்டியிலும், வனப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலிலும் உறுப்பினராக உள்ளார். மேற்கு வங்க அரசு இத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ரூ.4 கோடியில் சிறப்பு நோக்கு வாகனங்களை உருவாக்கத் திட்டமிட்டது. "பொதுவான வசதிகளுடன் கூடிய மையம் ஒன்றை பல்ராம்பூரில் அமைக்கவும் திட்டமிட்டது.

இவ்வாறு ஒட்டுமொத்த புருலியா மாவட்டத்தின் அரக்கு உற்பத்தி மேம்பாட்டுக்குத் திட்டம் வகுத்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் ஆலைகள் அமைக்கவும், இயந்திரங்கள் வாங்கவும் உதவ முடிவெடுத்துள்ளது. மேலும், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான உதவிகள் ஆகியவற்றை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கிறது" என்று கூறுகிறார் ராஜீவ் சின்ஹா. இவர் மேற்கு வங்க மாநிலத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார்.

மேற்கு வங்க அரசு தனது ஆண்டு விற்றுமுதலை 270 கோடி ரூபாயிலிருந்து 400 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் தற்போது 80 கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது. இதை 200 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. அரக்குப் பொருட்களைப் பொறுத்தவரையில் 2016-17ஆம் நிதியாண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியாகியுள்ளது. இதில் புருலியாவிலிருந்து மட்டும் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தாங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் புதிய சந்தை வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம் என்கிறார் தீபக் பங்கா என்ற ஏற்றுமதியாளர். இவர் மேலும் கூறுகையில், "செயற்கை பிசின்கள் வரத்து அதிகரித்துள்ளதால் அரக்கு விற்பனை கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. செயற்கை பிசின்களைப் போலல்லாமல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் ஒன்றாக இருப்பது மட்டுமின்றி அப்பகுதியைச் சார்ந்துள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்கும் ஒன்றாகவும் அரக்கு உள்ளது" என்கிறார்.

நன்றி: லிட்டில் இந்தியா

தமிழில்: பிரகாசு

நேற்றைய கட்டுரை: அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலங்கள்!

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon