மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

மத்திய சுகாதாரத் திட்டத்தில் 78 லட்ச தமிழ்க் குடும்பங்கள்!

மத்திய சுகாதாரத் திட்டத்தில் 78 லட்ச தமிழ்க் குடும்பங்கள்!

தமிழ்நாட்டில் சுமார் 78 லட்சம் குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்தக் குடும்பங்கள் அனைத்தும் மாநில அரசு முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீடு திட்டத்தின் கீழ் உள்ளன. மாநில அரசின் இந்தத் திட்டம் 1.58 கோடி குடும்பங்களின் சுகாதாரத் தேவைகளை கவனித்து வருகிறது என்று மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமூக, பொருளாதார மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பு (எஸ்.சி.சி.) அடிப்படையில், இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டுபிடித்துள்ளனர். மாநில அரசின் திட்டத்துடன் இணைந்து மத்திய அரசின் திட்டமும் ஒருங்கிணைக்கப்படுவதால், இதிலுள்ள நன்மைகள் மற்றும் பிரீமியம் அளிப்பதில் குழப்பங்கள் ஏற்படும்.

நிதி மற்றும் சட்டத் துறைகளுடன் இணைந்து மத்திய - மாநில சுகாதார பாதுகாப்புத் திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், மாநில அரசும் இதுகுறித்து தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் அனைத்து அதிகாரபூர்வ நடவடிக்கைகள் முடிந்தபின்பு மத்திய - மாநில அரசாங்கங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

மத்திய அரசின் சுகாதார பாதுகாப்புத் திட்டம் சுமார் 10.74 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உள்ளன. இத்திட்டத்தில் ஏழை மக்கள், கிராமப்புற மக்கள் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு அட்டையின் மதிப்பு, ஒரு குடும்பத்திற்கு 2 லட்சம் ஆகும். ஆண்டு வருமானம் 72,000 உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தத் திட்டமானது 1,027 நடைமுறைகளை உள்ளடக்கியது. இதில் 38 முக்கிய நோயறிதல் நடைமுறைகள், 8 உயர் முடிவு நடைமுறைகள் மற்றும் 113 பின் தொடர் நடைமுறைகள் ஆகியவை அடங்கும். முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீடு திட்டத்திற்கு நடப்பாண்டில் 1,361.6 கோடி ரூபாயை மாநில அரசு வழங்கியுள்ளது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon