மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

இணையப் படையை வலுப்படுத்தும் உ.பி. பாஜக!

இணையப் படையை வலுப்படுத்தும் உ.பி. பாஜக!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக இணையப் படையைத் தயார் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது உத்தரப் பிரதேச பாஜக. இன்னும் மூன்று மாதங்களில் அம்மாநிலம் முழுக்கப் பணியாற்றும் வகையில் 2 லட்சம் பேரைத் திரட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

சமீபத்தில் லக்னோவில் உத்தரப் பிரதேச மாநில பாஜக உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சார்ந்த நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உ.பி. பாஜக துணைத்தலைவர் ஜேபிஎஸ் ரதோர், வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜக இணையப்படையைச் (சைபர் சேனா) சேர்ந்த ஒரு வீரர் (நபர்) இருக்கும் வகையில் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தார். இதுபற்றி திவயர் இணைய இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

“பெருமளவிலான மக்களைச் சென்று சேர இணையமும் சமூக வலைதளங்களும் உதவியாக இருக்கின்றன. இதன்மூலமாகக் கட்சியின் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில் சுமார் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இன்னும் 3 மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடையும்” என்று கூறினார் ஜேபிஎஸ் ரதோர். ஒரு தேர்தல் முடிந்ததுமே, அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை பாஜக மேற்கொள்வது வழக்கமென அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கும் தகுதி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களை இலக்காகக் கொண்டு, இந்த இணையப்படை செயல்படும் என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் ரதோர். “வாக்காளர் பட்டியலில் உள்ள உண்மையான வாக்காளர்களைச் சரிபார்க்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபடுவார்கள். இதனால் போலி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாது” என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச பாஜக தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சஞ்சய் ராய், கல்லூரி மாணவர்களிடம் நமோ செயலியையும் பாஜகவின் சமூக வலைதளச் செயல்பாடுகளையும் இந்த இணையப்படையினர் எடுத்துரைப்பார்கள் என்று கூறினார். “மாணவர்களின் எண்ணங்கள் மூலமாக, கட்சியை விரிவாக்கவும், வளர்ச்சிப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நமோ செயலி மூலமாக புதிய ஆதரவாளர்களை உருவாக்குவதற்கான முகாம்களையும் பாஜக நடத்தும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டங்கள், கொள்கைகள் மற்றும் சாதனைகள் குறித்து ஒவ்வொரு குடிமகனும் வைத்துள்ள பார்வைகள் இணையப்படையினர் மூலமாக உறுதிப்படுத்தப்படும்” என்றார் சஞ்சய் ராய்.

வரும் 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவானது அதிநவீன வசதிகள் கொண்டதாக மாற்றப்படுமென நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பாஜகவினர். தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தெரியாத நிலையில், இப்போதே வாக்கு வேட்டைக்கான பணிகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொண்டுவருகிறது அக்கட்சி.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon