மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

சிறப்புப் பார்வை: தலித்துகளைக் கவர இருமுனை வியூகம்!

சிறப்புப் பார்வை: தலித்துகளைக் கவர இருமுனை வியூகம்!

முனைவர் ஒய். ஸ்ரீனிவாச ராவ்

இந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் – 3

இந்து ராஷ்டிரம் தலித்துகளுக்கு இரட்டை ஆபத்து. அது மாற்றியமைக்கப்பட்ட சாதியமைப்பு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறது. தலித்துகளின் கடும் போராட்டங்களின் வாயிலாக அவர்கள் சாதித்தவை அனைத்தையும் தலைகீழாகத் திருப்பப் பார்க்கிறது. அது என்னதான் அரசியல் வாய்ப்புகளை அளித்தாலும், ஆர்எஸ்எஸ் -பாஜகவில் தலித்துகள் இருப்பது அவர்களுடைய கருத்தியலை ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களுடைய கருத்தியலைஒ பரப்பவும் அவர்களுடைய நோக்கங்களை அடையவும் பணிபுரிவதற்குமேயன்றி வேறெதற்குமல்ல.

இன்றைய இந்துயிசமும் காலனியாதிக்கத்திற்கு முந்தைய இந்துயிசமும் உள்ளடக்கத்திலும் கலாச்சாரத்திலும் வெவ்வேறானவை. நவீன இந்து சமுதாயம் காலனியாதிக்கத்துக்கு முந்தைய வடிவத்திற்குப் புத்துயிரூட்டுவதில் அதிக ஆர்வமுள்ளதாக இருக்கும். இந்துயிசத்தின் சீர்திருத்தப்பட்ட வடிவம்கூட தலித் மக்களை சுயமரியாதையுடன் நடத்தத் தவறியிருக்கிறது என்றால் காலனியாதிக்கத்துக்கு முந்தைய வடிவம் திரும்பி வருவதற்கு தலித்துகள் அனுமதித்தால் அது எவ்வளவு அபாயகரமானதாக இருக்கும்?

ஒன்றுபட்டுச் செயல்பட முடியுமா?

மேலும், காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய ஆர்எஸ்எஸ் -பாஜக கூட்டணிக்கு ஒரு நூற்றாண்டு காலம் சீர்திருத்தத்திற்கு உள்ளான இந்துயிசத்தில் அக்கறையில்லை. உண்மையில் பார்க்கப்போனால், பிரிட்டிஷாரின் ஆதரவுடன் பார்ப்பன சீர்திருத்தவாதிகளால் துவக்கப்பட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவை பலவீனப்படுத்துவதற்கான பிரிட்டிஷ் சதி என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த மனப்பான்மையே தலித்துகளை பாஜகவின் கருத்தியல் எதிரிகளாக்குகின்றன. தலித்துகள் முழுமனதோடு தங்கள் கருத்தியலை ஆதரிப்பார்கள் என ஒருபோதும் ஆர்எஸ்எஸ் - பாஜக நம்புவதில்லை. அதேபோல இந்துயிசத்திற்கும் சாதி முறைக்கும் எதிரான அவர்களுடைய போராட்டத்தை ஆர்எஸ்எஸ் - பாஜக விரும்பும் என தலித்துகள் ஒருபோதும் நம்புவதில்லை. இரு தரப்பிலும் எவராவது அத்தகையதோர் சாதகமான தோற்றத்தைக் கொடுத்தால் அது போலித்தனமேயன்றி வேறல்ல.

பாஜக ஆளும் மாநிலங்களில் 2015இல் ஷெட்யூல்டு சாதிகளுக்கான தேசியக் கமிஷன் கூறுவதன்படி தலித்துகளுக்கு எதிரான அதிகபட்சக் குற்றங்கள் குஜராத்தில் நடைபெற்றன. சத்தீஸ்கரும் ராஜஸ்தானும் அதற்கு அடுத்த இடங்களில் இருந்தன. பாஜக ஆளும் மாநிலங்கள் தலித்துகளுக்குப் பாதுகாப்பானவை அல்ல என்பதையும் ஆர்எஸ்எஸ் -பாஜகவின் கருத்தியல் தலித்துகளுக்கு எதிரான புதுவகையான குற்றங்களைக் கொண்டுவருகின்றன என்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது.

குற்றங்களின் தன்மை காட்டும் உண்மை

பாஜக ஆட்சியிலும் பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சியிலும் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் நிலவும் வேறுபாடு, பசுத்தோலைக் கொண்டுசென்ற காரணத்திற்காக அவர்கள் அரை நிர்வாணமாக்கப்பட்டு அவர்கள் கொண்டுசென்ற பாதையிலேயே அவர்களைக் கட்டி இழுத்துச் சென்று இரும்புத் தடிகளாலும் மரத்தடிகளாலும் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்திலிருந்து தெளிவாகிறது. 11 ஜூலை 2016 அன்று குஜராத்தில், கிர் சோமநாத் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது முதற்கொண்டே தலித்துகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. பாஜக தலைவர்கள் அவர்களைல் பன்றிகள் என்று அழைத்தனர். அவர்களுடைய தலைவர்கள் - உயிரோடு இருந்தாலும் சரி இறந்திருந்தாலும் சரி - தவறாக நடத்தப்பட்டு அவமதிக்கப்பட்டனர். அவர்களுக்கான அரசியல், சட்ட ரீதியான பாதுகாப்புகள் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டன. அவர்களுடைய நிதிகள் திசைதிருப்பப்பட்டன. அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டுவருகின்றன. இவையனைத்துமே புதியவை, முன்பு எப்போதுமே கண்டிராத வகையிலானவை. பாஜக இந்து பெரும்பான்மையினரின் கட்சியாக இருக்கிறது என்ற திமிரில் நிகழ்த்தப்பட்டவை.

தலித்துகள் கடந்த காலத்திலும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய நிலைமை 2014க்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்களின்போது இப்போது இருப்பதைவிட நன்றாக இருந்தது என்று சொல்லிவிட முடியாதுதான். இருப்பினும், அந்தத் தாக்குதல்களில் பெரும்பாலானவை தலித் - மேல்சாதியினர் மோதல்களாகும். அவை மேல்சாதியினரின் ஆதிக்கம், அவர்களின் பாகுபாடு அவர்கள் செய்த அவமரியாதை ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கியதால் நிகழ்ந்த எதிர்த் தாக்குதல்களாகும். இறந்த பசுவைத் தோலுரிப்பது, தோலை வைத்து வியாபாரம் செய்வது போன்ற தங்களுடைய வழக்கமான பணிகளைச் செய்வதற்காக அப்போது தலித்துகள் அநேகமாகத் தாக்கப்படவில்லை.

மனுவாதிகளும் தலித்துகளும்

மனுவாதிகளைப் பொறுத்தவரை, தலித்துகள் இந்து விரோதிகள். வர்ண அமைப்பு முறையை எதிர்க்கிறவர்கள். தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் சமூக அமைப்பு குறித்தும் இதர வடிவங்களிலான சமனற்ற தன்மை குறித்தும் தொடர்ந்தும் இடைவிடாமலும் பிரச்சாரம் செய்வதன் மூலம் இந்தியாவை அவமானப்படுத்துபவர்கள். இந்து மதத்திற்கெதிராகக் கட்டமைக்கப்பட்ட இயக்கத்தை நடத்துபவர்கள். புரோகிதர் பணி உள்பட வாழ்வின் எல்லாத் துறைகளிலும் சமத்துவத்தைக் கோருபவர்கள். சாதி எதிர்ப்புத் தத்துவங்களையும் சொல்லாடல்களையும் உருவாக்குபவர்கள். அம்பேத்கர் போன்ற இந்து விரோத நாயகர்களை மதிப்பவர்கள். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பகுத்தறிவையும் தலித்துகளுக்கும் நாட்டுக்கும் இன்றியமையாத் தேவையான சித்தாந்தம் என ஆதரிப்பவர்கள். அவர்கள் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு அபாயகரமானவர்களாதலால் அத்தகைய சமூகத்தை விட்டுவைக்கக் கூடாது.

மனுவாதிகளைப் பொறுத்தவரை இந்தியாவில் தலித்துகள் சாதிக்கு மட்டும் எதிரிகள் அல்ல; மதம், கலாச்சாரம், தேசம் ஆகியவற்றுக்கும்கூட எதிரிகள். அம்பேத்கரிசமே இந்து ராஷ்டிரத்தை அடைவதற்கான பாதையிலுள்ள மிகப் பெரும் தடைக்கல். ஏனெனில், தலித்துகள் கௌரவமான மனித வாழ்க்கையை வாழ விரும்பினால் இந்து மதம் அவர்களுக்குப் பொருந்தாது எனவும் வேறு மதத்திற்கு மாறுவது மட்டுமே ஒரே வழி எனவும் சந்தேகத்திற்கிடமின்றி அம்பேத்கர் நிறுவியுள்ளார். புத்த மதத்திற்கு மதம் மாறி அவர் பாதையைக் காட்டினார். அம்பேத்கரிசம் இந்து மதத்தை தலித் விரோத, மானுட விரோதத் தன்மை வாய்ந்தது என எதிர்த்து நிராகரிப்பதால் அனைத்து வழிகளிலும் அது எதிர்க்கப்பட்டாக வேண்டும்.

இருமுனை வியூகம்

அத்தகைய எதிர்ப்பு இரு வழிகளில் செய்யப்பட வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஒன்று பலப் பிரயோகத்தின் மூலம் தலித்துகளை பாஜகவின் பாதைக்குக் கொண்டுவருவது; இரண்டாவது, அம்பேத்கர் போன்ற தலித் பிரபலங்களைக் கைப்பற்றிக் கஷாயம் மாட்டி தலித்துகளை இந்துமயமாக்குவது.

முதலாவதாகச் சொல்லப்பட்ட வழிமுறை நேரடித் தாக்குதல்கள், விளைவுகள் பற்றி அவர்களை எச்சரிப்பது, தலித் விரோத சாதி இந்துக்களுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பது, நீதியை மறுக்க அதிகாரவர்க்கத்தையும் போலீசையும் நீதித் துறையையும் தவறாகப் பயன்படுத்துவது, தன் தலைவர்களையும் ஊழியர்களையும் தலித்துகளைத் தாக்கும்படி உற்சாகப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியது.

இரண்டாவது வழிமுறை, தலித் பிரபலங்களின் பிம்பங்களைக் கைப்பற்றுவது, அவர்களுடைய பாரம்பரியத்தை தனதென்று கோருவது, அவர்களுடைய தத்துவங்களையும் கருத்துக்களையும் தவறாகப் பொருள்படுத்திக் காட்டுவது, தலித் தலைவர்களை கௌரவிக்கும் இலச்சினைகளை உருவாக்குவதுபோல (சிலைகள் எழுப்புவது, திட்டங்களுக்கு தலித் தலைவர்கள் பெயரைச் சூட்டுவது, தலித் தலைவர்களுக்கு நினைவிடங்கள் எழுப்புவது போன்ற) போலித்தனமான முயற்சிகளை மேற்கொள்வது, அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அவர்களோடு உணவருந்தும் ராஜதந்திரம் போன்ற முயற்சிகளைக் கையாள்வது ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

விழிப்புணர்வு பெற்ற தலித்துகள்

சில அப்பாவி தலித்துகள் இத்தகைய யுக்திகளுக்கு இரையாகியிருக்கலாம். ஆனால் கல்வி கற்றுள்ள உணர்வுபூர்வமான தலித்துகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்த யுக்திகள் நன்கு தென்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பாஜக இந்த நாடகங்களை நடத்தும்போதும் இந்த முயற்சிகளின் உள்ளீடற்றதன்மையை தலித்துகள் அம்பலப்படுத்தினர். எப்போதெல்லாம் அவர்களுடைய தீவிரவாத சக்திகள் தலித்துகளைத் தாக்கினார்களோ அப்போதெல்லாம் தலித்துகள் நீதி கேட்கும் ஜனநாயக எதிர்ப்பு இயக்கங்களை நடத்தினர். அம்பேத்கரைக் கஷாயமயப்படுத்தி கவர்ந்துகொள்வதற்கும் தலித்துகளை இந்துமயமாக்குவதற்குமான திட்டங்களோடு முன்வரும்போதெல்லாம் அவர்களுடைய போலித்தனம் உடனடியாக அம்பலப்படுத்தப்பட்டது.

ஆர்எஸ்எஸ்ஸின் இந்த இருமுனை வியூகம் உணர்வுபூர்வமான தலித்துகளிடம் பலிக்கவில்லை. இருப்பினும், அம்பலப்படுத்தப்பட்ட பிறகும்கூட அவர்கள் தங்கள் குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை; அல்லது வெட்கப்பட்டதில்லை.

முதல் இரு ஆண்டுகளில் பாஜக அம்பேத்கரை அபகரித்துக்கொள்ள முதன்மையாக கவனத்தைக் குவித்தது. அதே நேரத்தில் அவர்களுடைய பிராந்தியத் தலைவர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகளின் அடியாட்கள் அவ்வப்போது பாஜகவின் உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்திவந்தனர். தேசியத் தலைவர்கள் கைப்பற்றும் முயற்சிகளைக் கையாளுகையில், மாநிலத் தலைவர்கள் அச்சுறுத்தும் முயற்சியைப் பயன்படுத்திவந்தனர்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அம்பேத்கரின் லண்டன் மனையை வாங்க ராமதாஸ் அதவாலேயைப் பயன்படுத்தினார். 2012இல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் மும்பையில் அம்பேத்கருக்கு நினைவகம் ஒன்றை அறிவித்தது என்றால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அதற்கான பேரைத் தட்டிச்செல்லப்பார்க்கிறது.

அம்பேத்கருடன் ஒரு சம்பந்தமும் இல்லாத நரேந்திர மோடி அம்பேத்கரின் காரணமாகத்தான் ஒரு சூத்திரரான நான் பிரதமராக முடிந்தது எனக் கூறிக்கொள்கிறார். 2015 பிகார் தேர்தல் பிரச்சாரத்தின்போது இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியம் பற்றிய மோகன் பாகவத்தின் அறிக்கை குறித்து எழுந்த விமரிசனத்தை எதிர்கொள்ள, "அம்பேத்கர் இல்லையென்றால் மோடி எங்கிருந்திருப்பார்?" என்று அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளுமளவுக்குச் சென்றார் மோடி. ஆனால் அம்பேத்கரின் பாரம்பரியத்தை தாங்கிச்செல்வதாக கூறிக்கொள்ளும் இவருக்கு ரோஹித் வேமுலாவின் தற்கொலையோ உனா சவுக்கடி சம்பவமோ ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

ரோஹித்தின் தற்கொலை பற்றிப் பேசும்படி நிர்பந்திக்கப்பட்டபோது, "அவருடைய தற்கொலைக்கான காரணங்களும் அவருடைய தற்கொலை குறித்து நடைபெறும் அரசியலும் வெவ்வேறு விஷயங்கள். எப்படியிருப்பினும், இந்தியத் தாய் ஒரு மகனை இழந்துவிட்டாள்" என்றார். உனா சவுக்கடி சம்பவம் பற்றி பேசுகையில், "நீங்கள் சுட வேண்டுமானால் என்னைச் சுடுங்கள், என் தலித் சகோதரர்களை அல்ல" என்றார். கல்வி கற்ற தலித் ஒருவருக்கு பிரதமரின் போலித்தனம் சுலபமாகத் தென்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, அம்பேத்கர் இந்து மதத்தை விடுத்து புத்த மதத்தில் சேர்ந்திருந்தாலும், 17 ஏப்ரல் 2017 அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினத்தன்று ஆர்எஸ்எஸ்ஸின் ஏடான ஆர்கனைசர் தனது அட்டையில் அம்பேத்கரை ‘ஒன்றுபடுத்துபவர்களிலேயே உச்சத்தை எட்டியவர்’ என்று குறிப்பிட்டு அவருடைய உருவப்படத்துடன் ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. அம்பேத்கர் சொன்னவை, செய்தவை ஆகிய அனைத்திற்கும் எதிராக உள்ள ஓர் அமைப்பு அம்பேத்கரைக் கஷாயவாதியாக்க மேற்கொள்ளும் இந்த முயற்சிகளைப் பார்த்து தலித்துகள் மட்டுமல்ல மொத்த தேசமும் எள்ளி நகையாடும் என்பதை உணரவில்லை என்பது ஆச்சரியமே.

ஆக, 2014 முதற்கொண்டே அம்பேத்கரைக் கவர்ந்துகொள்வதற்கான யுக்திகள், தந்திரங்கள் மற்றும் திட்டங்களின் நீண்ட பட்டியலே உள்ளது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவுமே வேலை செய்யவில்லை.

(கடந்த நான்கு ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் என்னென்ன? நாளைக் காலை…)

நன்றி: கவுன்ட்டர் கரன்ட்ஸ்

தமிழில்: பா. சிவராமன்

இந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் - 1!

இந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் - 2!

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon