மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

விவசாயப் பிரச்சினையைப் பேசும் ‘குத்தூசி’!

விவசாயப் பிரச்சினையைப் பேசும் ‘குத்தூசி’!

திலீபன் நடித்துள்ள குத்தூசி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்ற உச்ச நட்சத்திரம் நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரத்தைக் கடந்து மனதில் நிற்கும்படியான பல கதாபாத்திரங்கள் உள்ளன. துணை நடிகர்களின் தேர்வு சரியாக அமைந்து தங்களது கதாபாத்திரங்களை நடிகர்கள் சரியாக செய்ததால் மும்பையின் தாராவி பகுதியைப் பற்றிய சித்திரம் பார்வையாளர்கள் மனதில் கச்சிதமாக உருவாகியது. ரஜினியின் மகனாக மட்டுமல்லாமல் அவரது வலதுகரமாக நடித்துள்ள திலீபன் வத்திகுச்சி படத்தின் மூலம் அறியப்பட்டாலும் காலா அவரை பெரும்பாலான ரசிகர்களிடம் கொண்டுசென்றுள்ளது.

காலா வெளியீட்டின் மூலம் அவர் மேல் உருவாகியிருக்கும் இந்த கவனத்தை அவர் நடித்துள்ள குத்தூசி படத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள அதன் படக்குழு முடிவுசெய்து அதன் ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளது.

விவசாயப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு ஆக்‌ஷன் - டிராமா ஜானரில் உருவாகிவரும் இப்படத்தில் திலீபன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அமலா நடித்துள்ளார். யோகி பாபு, கவிஞர் ஜெயபாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“இந்த உலகத்துக்கே உழவு சொல்லிக்கொடுத்த பரம்பரை டா” என்ற வசனமும் மரம், மாடு என விவசாயத்தோடு தொடர்புடையவற்றைக் காக்க வேண்டும் என்பதான காட்சிகளும் கதையின் மையத்தைக் கூறுகின்றன. விவசாயத்தை விட்டு வெளிநாடுகளில் பிழைக்கச் செல்வதும் அதன் மூலம் நடைபெறும் பிரச்சினைகளும் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

சிவசக்தி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பாக்கி ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். என்.கண்ணன் இசையில் கவிஞர் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீ லட்சுமி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. விரைவில் இதன் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon