மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

தவறான வகை ரத்தம்: உயிருக்குப் போராடும் பெண்!

தவறான வகை ரத்தம்: உயிருக்குப் போராடும் பெண்!

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, தவறான வகை ரத்தம் செலுத்தப்பட்டதால் இளம்பெண் ஒருவர் உயிருக்குப் போராடி வருவதாக, அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் கூறியுள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள கொலம்பியா ஆசியா என்ற தனியார் மருத்துவமனையில், அபிஜித் சாஹா என்பவரின் மனைவி பைசாகி (வயது 31), வயிற்றுவலி காரணமாக கடந்த 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பைசாகிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் ரத்தம் ஏற்றும்போது, பைசாகியின் A+ ரத்த வகைக்குப் பதிலாக, AB+ ரத்த வகை மருத்துவர்களின் அலட்சியத்தால் மாற்றிச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பைசாகியின் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் உட்பட உறுப்புகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மேலும் உடல்நிலை மோசமாகியதன் காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் உயிருக்குப் போராடி வருவதாகக் கூறப்படுகிறது.

மருத்துவர்களின் அலட்சியத்தால்தான், தனது மனைவியின் உடல்நிலை மோசமாக உள்ளதாகக் குற்றம்சாட்டும் அபிஜித் சாஹா, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுவரை 2.5 லட்ச ரூபாய் பணத்தை சிகிச்சைக்காகக் கட்டியுள்ளதாகவும், மீதியிருக்கும் இருக்கும் பில் தொகையை செலுத்தத் தவறினால் மனைவிக்கு அளிக்கும் சிகிச்சை நிறுத்தப்படும் என்று நிர்வாகம் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் சாஹா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனையின் டீன் திர்தங்கர் பக்சி தெரிவிப்பதாவது, "தற்போது பைசாகி நலமுடன் இருக்கிறார். அவருக்குத் தவறுதலாக வேறு வகை ரத்தம் செலுத்தப்பட்டது குறித்துக் கண்டறிய உயர்மட்டக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்கான மீதி தொகையை செலுத்துமாறு கணக்குத் துறையை சேர்ந்த யாரேனும் கூறியிருக்கலாம், ஆனால் நிர்வாகம் சார்பில் அவருக்கு அழுத்தம் தரப்படவில்லை. அப்படி யாரேனும் தவற்றில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon