மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

சாலைத் திட்டத்தால் பெருகும் வேலைவாய்ப்பு!

சாலைத் திட்டத்தால் பெருகும் வேலைவாய்ப்பு!

நெடுஞ்சாலைக் கட்டுமானப் பணிகள் அதிகரித்துள்ளதால் கடந்த நான்கு ஆண்டுகளில் இத்துறையில் வேலைவாய்ப்பும் இருமடங்கு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2012-13ஆம் நிதியாண்டில் சாலைக் கட்டமைப்புத் துறையில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தவர்கள் எண்ணிக்கை 45,600 ஆக இருந்தது. 2017-18ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 1.1 லட்சமாக அதிகரித்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல டாக்ஸி போக்குவரத்துத் துறையில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் ஓட்டுநர்களாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஓட்டுநரும் மாதம் ஒன்றுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையில் ஊதியமாகப் பெறுகின்றனர். இ-ரிக்சாக்களுக்கு அனுமதி பெறுவதற்கான சில விதிகளை அரசு விலக்கியுள்ளது. இதன்மூலம் இத்துறையிலும் வேலைவாய்ப்பு பெருகும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறுகையில், 'சாதாரண மனிதர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் பயனுள்ள புதுமையான திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. 2017-18ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு 9,830 கிலோ மீட்டராக உள்ளது. இது 2013-14ஆம் ஆண்டில் 4,260 கிலோ மீட்டராக மட்டுமே இருந்தது. வாழ்வை எளிதாக்குவதற்கான திட்டங்களைத் தொடர்ந்து ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது' என்று கூறியுள்ளது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon