மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

காங்கிரஸ் – மஜத இன்று பேச்சுவார்த்தை!

காங்கிரஸ் – மஜத இன்று பேச்சுவார்த்தை!

கர்நாடகாவிலுள்ள கூட்டணி அரசின் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கும் நோக்கில், இன்று (ஜூன் 14) காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

கடந்த மே 23ஆம் தேதியன்று கர்நாடகாவின் முதலமைச்சராக குமாரசாமியும் துணை முதல்வராக பரமேஸ்வராவும் பொறுப்பேற்றனர். இதன் பின்னர் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியின் அமைச்சரவை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று கர்நாடகாவில் இந்த கூட்டணியைச் சார்ந்த 25 அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. சில அமைச்சர் பதவிகள் காலியாக விடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்தப் பதவிகள் விரைவில் நிரப்பப்படுமென்று காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூறியுள்ளன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர். இதனைத் தவிர்க்கும் பொருட்டு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை அமைச்சர்களின் பதவி குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்தார் பரமேஸ்வரா. இந்த நிலையில், இன்று காங்கிரஸ் – மஜத கட்சிகளின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

வரும் ஐந்தாண்டுகளுக்கான கர்நாடகக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, தற்போதைய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வரா, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படவுள்ளார் மஜதவின் பொதுச்செயலாளர் டேனிஷ் அலி.

அரசு நிறுவனங்கள் மற்றும் குழுவில் உள்ள பதவிகளை நிரப்புவது குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளது. இதில் முக்கியமான 14 பதவிகள் மீது காங்கிரஸ் கட்சியினர் குறிவைத்துள்ளனர். கர்நாடக அமைச்சரவையில் இடம்கிடைக்காத அதிருப்தியாளர்களுக்கு இந்தப் பதவிகள் வழங்கப்படுமென்று தெரிகிறது.

மாதத்திற்கு ஒருமுறை காங்கிரஸ் – மஜத ஒருங்கிணைப்புக் குழு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, கூட்டணி அரசு செயல்பட குறைந்தபட்ச செயல்திட்டம் அவசியம் என்று தெரிவித்தார். “அதனை உருவாக்குவது பற்றி நாளை விவாதிக்கவிருக்கிறோம். குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கியபிறகு, அதனை மாநில அரசு அமல்படுத்தும்” என்றார். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, சித்தராமையா பதிலளிக்க மறுத்துவிட்டார். இதுபற்றி முதலமைச்சர் குமாரசாமி கருத்து வெளியிடுவார் எனத் தெரிவித்தார்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon