மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

தியேட்டர் டிக்கெட்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தியேட்டர் டிக்கெட்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

காலா படத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளின் டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம் ஆகியவை முறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குப் பின் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் இவை முன்னணி நடிகர்களின் படங்களுக்குத் தளர்த்தப்பட்டு அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவது தொடர்ந்துவருகிறது.

இந்நிலையில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் திரையிடும் திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி சென்னை பெரம்பூர் செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், எம்.தண்டபாணி அமர்வு முன் இன்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்தனர். விதிமீறலில் ஈடுபடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

விதிமீறலில் ஈடுபடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

படத்திற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தித் தர வேண்டிய திரையரங்கங்கள், அதற்காக வசூலிக்கும் கட்டணமும் அதிகமாக இருப்பதாகவும், சில நேரங்களில் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர். வாகன நிறுத்தத்திற்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் திரையரங்குகளுக்கு அறிவுறுத்தல் வழங்கத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon