மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

விலைச் சரிவால் வீணாகும் வாழைப்பழங்கள்!

விலைச் சரிவால் வீணாகும் வாழைப்பழங்கள்!

வாழைப்பழ உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில் சந்தையில் அவற்றுக்குப் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவற்றைத் தங்களது கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிக செலவு செய்து காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கும் விவசாயிகளுக்குச் சந்தையில் அதற்கான போதிய விலை கிடைக்காதபோது, உற்பத்திச் செலவைக் கூட ஈட்ட இயலாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் வெறுப்பாலும் கோபத்தாலும் அவர்கள் விளைவித்த, சந்தையில் விலைபோகாத காய்கறி மற்றும் பழங்களை வீதிகளில் கொட்டுகின்றனர். வெங்காயம், தக்காளி, பூண்டு, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளின் வரிசையில் தற்போது வாழைப்பழமும் இணைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநில வாழைப்பழ விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் வாழைப்பழங்களை வீதிகளில் கொட்டியும், கால்நடைகளுக்குத் தீவனமாக வழங்கியும் வருகின்றனர்.

வாழைப்பழ உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மத்தியப் பிரதேச மாநிலம் பட்வானி மாவட்டத்தில் வாழைப்பழங்களின் சந்தை விலை டன் ஒன்றுக்கு ரூ.500 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் ஒரு டன் அளவிலான வாழைப்பழங்களை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ரூ.8,000 வரையில் செலவாகிறது. மேலும், வாழைப்பழங்களை விற்பனைக்காக டிரக்குகளில் ஏற்றுவது, இறக்குவது போன்றவற்றுக்கான கூலியும் அதிகமாக உள்ளது. எனவே இவற்றை விற்பனை செய்வதை விடத் தங்களது கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிடலாம் என்கின்றனர் வாழைப்பழ விவசாயிகள். வாழைப்பழங்களுக்கான சீசன் சமயத்திலேயே இவ்வாறு விலைச் சரிவு ஏற்பட்டுள்ளதற்கு இடைத் தரகர்களும் வர்த்தகர்களுமே காரணம் என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இவர்கள் நீண்ட காலமாகவே வாழைப்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்று கோரிவருவதும் குறிப்பிடத்தக்கது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon