மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

தினகரன் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

தினகரன் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து அவரது ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்..

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், தான் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றதாகவும், தேர்தல் வழக்கு தொடர்ந்த ரவி 246 வாக்குகள் மட்டுமே பெற்றதாக கூறியுள்ளார்.

மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தனக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறித் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை இன்று (ஜூன் 13) விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon