மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

நானும் ‘டான்’தான்: ஜுங்கா

நானும் ‘டான்’தான்: ஜுங்கா

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

படம் பற்றிய கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி அடுத்தடுத்த காட்சிகளில் அதற்கான பதில்களையும் தருவதாக ட்ரெய்லர் அமைந்துள்ளது.

'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என விஜய் சேதுபதியை கதாநாயகனாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை அளித்த கோகுல், பிரான்ஸ் பின்னணியில் அல்ட்ரா மார்டன் லுக்கில் விஜய் சேதுபதியை உலகமே நடுங்கும் டானாக உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே ட்ரெய்லர் ஆரம்பமான சில நொடிகள் தோன்றியது. அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் பிரான்ஸ் போயுள்ள ‘சுமார் மூஞ்சி' குமாரை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

தனது யதார்த்தமான நடிப்பால் எளிமையான அணுகுமுறையால் குறுகிய காலத்தில் தனக்கெனத் தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள விஜய் சேதுபதியை நோக்கி அவரது ரசிகர்கள் பாடும்படி பொருள்கொள்ளக்கூடிய பாடல் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

ரசிகனை ரசிக்கும் தலைவா

மக்கள் செல்வன் வா

நீ வெற்றியுடன் வா

உன்னை வெல்ல எவன் டா

ஊர் போற்றும் தலைவா

என அப்பாடல் ஒலிக்க விஜய் சேதுபதி வேட்டி கட்டி மீசையை முறுக்கியபடி நடந்து வரும் காட்சி அவரது ரசிகர்களைக் கவர்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி இனி கதாநாயகனை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களில் நடிக்கப்போகிறாரோ என்ற சந்தேகம் மேற்சொன்ன பாடலைப் பார்க்கும்போது உருவாகியது. ஆனால் அதன் முடிவில் அவரே அதை, “தேவையில்லாம ஹைப் ஏத்துற வேலையை எல்லாம் வச்சுக்கக் கூடாது” என மறுத்துள்ளார்.

சாயிஷா, மடோனா என இரு நாயகிகள் வலம் வர தான் ஒரிஜினல் டான் அல்ல என்பதைத் தனது செய்கைகள் மூலம் விஜய் சேதுபதி நிரூபிக்கிறார். சூது கவ்வும், நானும் ரௌடி தான், இதற்கு தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களை வெவ்வேறு கதைகளங்களில் விஜய் சேதுபதி ஏற்றிருந்தாலும் முற்றிலும் வித்தியாசமான பின்னணியில் கதை பயணிப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும் ஜுங்கா படத்தின் இசை வெளியீடு இன்று (ஜூன் 13) சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி, சாயிஷா உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டனர். இதில் விஜய் சேதுபதி பேசுகையில், “இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்த படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில்தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விஷயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம். இதில் பஞ்ச் இருக்கா, இல்லையா என்று என்னிடம் கேட்பதைவிட, அதை ரசிகர்கள்தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம்” என்று கூறியுள்ளார்.

ஜுங்கா ட்ரெய்லர்

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon