மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ஸ்டெர்லைட் மூடல் அரசாணை முறையாக இல்லை!

ஸ்டெர்லைட் மூடல் அரசாணை முறையாக இல்லை!

ஸ்டெர்லைட் ஆலையை மூட முறையான அரசாணை வெளியிட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஜூன் 13) உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்ற மக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 15 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்றுவருகிறது.

அதன்படி ஆலையை மூடுவதாக அரசு வெளியிட்ட அரசாணை தெளிவற்று இருப்பதாகக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கை இன்று நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது ஆகியோர் விசாரித்தனர். அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், தூத்துக்குடியில் அமைதி திரும்பியுள்ளதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவியை உயர்த்தி 20லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டதாகவும் கூறினார்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அஜ்மல்கான், தமிழக அரசின் அரசாணையை நீதிபதிகளிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து, “2018 மே 28ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல் குறித்த சட்டப் பிரிவுகளின் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பு கொடுக்கப்பட்ட அனுமதி காலாவதி ஆகிவிட்டது. மீண்டும் புதிய அனுமதி கொடுக்கவில்லை என்பதால், இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின் 48ஆவது பிரிவின் அடிப்படையில், ஆலை நிரந்தரமாக மூடப்படுகின்றது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முறையீடு செய்து அனுமதி பெற்றால், தமிழக அரசு ஆணை செல்லுபடி ஆகாது. ஆலையை மீண்டும் இயக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான காரணங்களை விளக்கமாகப் பட்டியலிட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்திய அரசியல் சட்டத்தின் 48ஆவது பிரிவின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக, கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஆலை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும்” என்று வாதிட்டார் அஜ்மல்கான்.

அந்த அரசாணையைப் படித்து பார்த்த நீதிபதிகள், அரசாணையில் திருப்தி இல்லை என்று தெரிவித்தனர். மின்சாரம், தண்ணீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் அனுமதி திரும்பப்பெறப்பட்டதாக மட்டுமே அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதோடு ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், மனித உயிர்களுக்கு 20 லட்சம் ரூபாய் தானா என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதித்ததைச் சுட்டிக்காட்டினர். பின்னர், விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு தமிழக அரசு ஏஜெண்டாகச் செயல்படுகின்றது. அதை எதிர்த்து 22 ஆண்டுகளாக நான் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகின்றேன். தூத்துக்குடியில் மே 22ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தியபோது, தமிழக அரசு காவல் துறையை ஏவி, ஈவு இரக்கமின்றி 13 பேரைச் சுட்டுக் கொன்றதுடன், பலரைப் படுகாயப்படுத்தி மிருகத்தனமான அடக்குமுறையை ஏவிவிட்டது.

எனவே, மக்கள் கொந்தளிப்புக்கு அஞ்சி, ஆலையை மூடுவதாக ஒரு கண் துடைப்பு நாடகத்தைத் தமிழக அரசு நடத்திவருகிறது. ஆலையை இயக்குவதற்கு டெல்லி தீர்ப்பாயத்திலோ, நீதிமன்றத்திலோ ஸ்டெர்லைட் நிர்வாகம் உரிய நிலையை ஏற்படுத்திக் கொள்ளட்டும்; அதன் பிறகு நீதிமன்றம் கூறுவதால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று மக்களையும் ஏமாற்றி விடலாம் என்று அரசு திட்டமிடுவதாக வைகோ குற்றம் சாட்டினார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon