மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ஓய்வூதியம் உயருமா?

ஓய்வூதியம் உயருமா?

நடப்பு நிதியாண்டில் அடல் பென்சன் யோஜனா திட்டத்துக்குள் 60 முதல் 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுவர முடியும் என்று பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான பி.எஃப்.ஆர்.டி.ஏ.வின் (Pension Fund Regulatory and Development Authority-PFRDA) தலைவரான ஹேமந்த் காண்ட்ராக்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜூன் 12ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய அடல் பென்சன் யோஜனா மாநாட்டில் ஹேமந்த் காண்ட்ராக்டர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கடந்த நிதியாண்டில் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 50 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைக்கப்பட்டனர். நடப்பு நிதியாண்டில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். ஏராளமான மக்கள் பயனடையும் படி, அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர அரசிடம் பி.எஃப்.ஆர்.டி.ஏ கோரிக்கை வைத்துள்ளது” என்று கூறினார். ஜூன் 12ஆம் தேதி வரையில், அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது.

அடல் பென்சன் யோஜனா திட்டத்திற்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆக உள்ளது. இதை 18 முதல் 50 வயதாகத் திருத்தியமைக்க அரசிடம் பி.ஃப்.ஆர்.டி.ஏ பரிந்துரைத்துள்ளது. மேலும், ஓய்வூதிய அடுக்குகளைத் திருத்தியமைக்க மற்றொரு பரிந்துரையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையில் ஐந்து ஓய்வூதிய அடுக்குகள் உள்ளன. ஹேமந்த் பேசுகையில், “உயர் ஓய்வூதியக் கட்டணங்களுக்காகச் சந்தையில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 60 வயதுக்கு மேல் 5,000 ரூபாய் ஓய்வூதியம் போதுமானதாக இருக்காது என்று பலரும் கருதுகின்றனர். ஆகையால், ஓய்வூதியத்தை 10,000 ரூபாய் வரை உயர்த்த அரசிடம் நாங்கள் முன்மொழிந்துள்ளோம்” என்று கூறினார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon