மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

மணல் வருவாயை மறைக்கும் அரசு!

மணல் வருவாயை மறைக்கும் அரசு!

மணல் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு என்பதை தமிழக அரசு மறைப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் நீர்ப்பாசனத் துறையின் திட்டச் சாதனைகள் குறித்த ஆவணத்தில் இடம் பெறுவது வழக்கம். அதன்படி சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் மணல் வருவாய் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். இன்று ( ஜூன் 13) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீர் பாசனத்துறையின் சாதனைகள் பற்றிய ஆவணத்தில் தமிழகத்தில் இப்போது எத்தனை மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன, அவற்றின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது அறியாமல் நடந்த தவறு அல்ல. மாறாக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகும்.

தமிழக ஆறுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பட்டு விற்கப்படும் மணலின் சந்தை மதிப்பு ரூ.55,000 கோடி. ஆனால், இதன்மூலம் அரசுக்கு கிடைப்பதாகக் கூறப்படும் வருமானம் மிகவும் சொற்பமாகும். அதுவும் கூட நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உதாரணமாக, 2011-12ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது மணல் மூலம் கிடைத்த வருவாய் ரூ.188.03 கோடியாகும். 2012-13ஆம் ஆண்டில் இது ரூ.188 கோடியாக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி என்ற அளவில் சரிந்து 2016-17ஆம் ஆண்டில் ரூ.86.33 கோடியாக குறைந்துள்ளது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடக்கும் மணல் கொள்ளை தான்’’ என்று பட்டியல் போட்டுள்ளார் ராமதாஸ்.

மேலும் அவர், “2016-17 ஆம் ஆண்டில் சந்தையில் ரூ.55,000 கோடிக்கும் மணல் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள சில மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்த சேகர் ரெட்டி குழுமத்திற்கு அந்த ஆண்டில் ரூ.493 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால், தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை இயக்கி வரும் பொதுப்பணித்துறைக்கு 2016-17ஆம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ.86.33 கோடி தான் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது.

ஆண்டுக்கு ரூ.55,000 கோடிக்கு மணல் விற்பனை நடைபெறும் நிலையில் அரசுக்கு ரூ.86 கோடி மட்டும் வருமானம் கிடைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அப்படியானால் மணல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் மீதமுள்ள தொகை யாருக்கு செல்கிறது? என்பது குறித்து பா.ம.க. ஆதாரங்களுடன் வினா எழுப்பியது. ஆளுனரிடமும் இது குறித்து புகார் அளித்தது. அதேபோன்ற நெருக்கடி இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த புள்ளிவிவரங்களை அரசு மறைத்திருக்கிறது.

தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளில் 2016-ஆம் ஆண்டு வரை மணல் விற்பனை தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல் மணல் விற்பனை பொதுப்பணித்துறை மூலம் நேரடியாக செய்யப்படுகிறது. இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்த மணல் கொள்ளையால் அரசுக்கு கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக கிடைத்த வருமானம் அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவாக இருக்கும் என்பதால் தான் அதை வெளியில் சொல்லாமல் தமிழக அரசு மறைத்திருக்கிறது. இதன் மூலம் ஆற்று மணல் கொள்ளை அதிகரித்துள்ள நிலையில், அதன்மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மிகவும் குறைந்திருக்கிறது என்று தான் கருத வேண்டும். இது தமிழகத்திற்கு இரட்டை இழப்பு ஆகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, மணல் கொள்ளை மற்றும் விற்பனையில் நடந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon