மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

செயற்கை நுண்ணறிவு நல்லதா, கெட்டதா?

செயற்கை நுண்ணறிவு நல்லதா, கெட்டதா?

கடந்த 10 ஆண்டுகளில் தினசரி ஒரு மனிதனின் சராசரி ஓய்வு நேரம், 1 மணி நேரமாக உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றால் வருடத்திற்கு 365 மணி நேரம். இதில் பெரும்பாலான நேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம்? நம் குழந்தைகளுடன் செலவிடுகிறோமா? இல்லை; உடற்பயிற்சி செய்கிறோமா? இல்லை; அல்லது நம் லட்சியத்தை நோக்கிப் பயணிக்க செலவிடுகிறோமா? அதுவும் இல்லை. அந்த 365 மணி நேரத்தை நாம் திரைக்கு முன்னரே அதிகம் செலவிடுகிறோம்.

2007ஆம் ஆண்டின் ஆய்வுப்படி ஒரு மனிதன் ஓய்வு நேரங்களைத் திரைக்கு முன்னால் செலவழித்த விழுக்காடு வெறும் 33 மட்டுமே. அது தற்போது 47 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் மூன்றரை மணி நேரம் போனில் செலவிடுவதாக மெக்கின்சேவின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. மேலும், சராசரியாக ஒரு நபர் 85 முறை தன் ஸ்மார்ட்போனுடன் தொடர்பு கொள்வதாகவும் கூறுகிறது. மேலும், அந்த ஆய்வில் பங்கேற்ற 46 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ்வே முடியாது என்றுள்ளனர்.

நாம் ஏன் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்டோம்?

இதற்கான விடை நம்மிடம்தான் இருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள்; யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள்; மொபைல் விளையாட்டுக்கள்... இவை அனைத்தும் இன்று நம் வாழ்வின் முக்கிய அங்கங்களாக மாறிவிட்டன. செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு வந்துள்ள இவை அனைத்தும் மனித மூளைகளை மழுங்கடிக்கச் செய்கின்றன.

சமூக வலைதளங்கள், வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் விளையாட்டுக்கள் இவை அனைத்தும் இணைய அடிமைத்தனத்தின் மோசமான விளைவுகளை உண்டாக்கும் எனப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. சமூக வலைதளங்களின் ஜாம்பவானான ஃபேஸ்புக் நிறுவனமே இது குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டு, ஃபேஸ்புக் பயன்படுத்துவதால் பயனர்களின் மனநிலை மற்றும் அவர்களின் கவலையின் அளவை எப்படி பாதிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தது.

யு.சி. சான் டியாகோ (கலிஃபோர்னியா பல்கலைக்கழகம்) மற்றும் யேல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், ஒரு நபர் சராசரியாக நான்கு தடவைக்கு மேல் ஒரு லிங்க்கை கிளிக் செய்தால் அவர்கள் மோசமான மனநலத்தைக் கொண்டவர்கள் என்று நிரூபணம் செய்தது. திரைக்கு முன்னர் நாம் செலவிடும் நேரமானது அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிரக் குறைந்தபாடில்லை என்றும் எச்சரித்தது.

டிவி ஷோக்கள், ஹாலிவுட் படங்கள் போன்றவற்றை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மக்களிடம் எடுத்துச் செல்லச் சில உத்திகளைப் பயன்படுத்துகிறது. ஒரு முழு வீடியோவில் உள்ள சாரம்சத்தை 12 விநாடிகளாகச் சுருக்கி ஒவ்வொரு எபிசோடுகளின் மத்தியில் ஒளிபரப்பும். இதனால் 61 விழுக்காடு பயனர்கள் ஒருதடவை வீடியோ பார்க்க உட்கார்ந்தால் தொடர்ச்சியாக இரண்டிலிருந்து ஆறு வீடியோக்கள் வரை பார்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஃபேஸ்புக் நிறுவனமும் இதே உத்தியைத்தான் கையாளுகிறது.

செயற்கை நுண்ணறிவு குறித்த கவனம் தேவை

செயற்கை நுண்ணறிவு என்ற ஒரு சக்தி நன்மையா தீமையா என்பதை ஆராய வேண்டாம். அது ஒரு சக்தி அவ்வளவுதான். அதன் பாதிப்பு விரிவடைகையில், அந்தச் சக்தியை ஆராயவும், தேவையான சமயத்தில் அதற்கு எதிராக நம்மைப் பாதுகாக்கவும் நாம் கவனமாக இருக்க வேண்டும். போலிச் செய்தி பரவல், குழந்தைகள் ஒரு விளையாட்டுக்கு அடிமையாதல், அவர்களின் புத்தக வாசிக்கும் பழக்கத்தை அழித்திடும் எண்ணம்... இவை அனைத்திற்கும் செயற்கை நுண்ணறிவு ஓர் அரணாகச் செயல்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. நெட்ஃப்ளிக்ஸ், ஃபேஸ்புக், மொபைல் கேம்ஸ் போன்றவற்றின் பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் முக்கிய பங்கு உள்ளது. இயற்கை நுண்ணறிவுக்கு இணையாக நுகர்வோரின் விழிப்புணர்வும் ஒருங்கிணைந்து வளர்ந்தால் மட்டுமே இந்த இணையப் போதைக்கு எதிராக மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

தகவல்கள்: குரியஸ்

தமிழில்: முத்துப்பாண்டி யோகானந்த்

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon