மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

கோதுமை: சேமிப்புத் திறனைக் கூட்ட முயற்சி!

கோதுமை: சேமிப்புத் திறனைக் கூட்ட முயற்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் கோதுமை கொள்முதல் 35 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. ஆகவே, தானியங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதற்கான கூடுதல் சேமிப்புக் கிடங்குகளை வாடகைக்கு எடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

கோதுமை போன்ற உணவுப் பொருட்களைக் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்வதற்கான முடிவுகளை எடுக்கும் அரசின் ஏஜென்சியாக இந்திய உணவுக் கழகம் உள்ளது. 2018-19 சந்தைப்படுத்துதல் ஆண்டில் (ஏப்ரல் - மார்ச்) மாநில கொள்முதல் ஏஜென்சிகளுடன் இணைந்து 35.19 மில்லியன் டன் அளவிலான கோதுமையை இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்திருந்தது. இந்த ஏஜென்சிகள் அனைத்தும் மொத்தமாகத் தங்களது கைவசம் 80 மில்லியன் டன் சேகரிப்புத் திறனைக் கொண்டுள்ளன. இதுகுறித்து உணவுத் துறை அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்திடம் பேசுகையில், “இருப்பில் நிறையத் தானியங்கள் உள்ளன. கோதுமையைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்ய வேண்டும். சேகரிப்புக்கான மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறோம். அதற்காகச் சேகரிப்புக்கான இடத்தை வாடகைக்கு எடுக்க நாங்கள் யோசித்து வருகிறோம்” என்று கூறினார்.

கொள்முதல் அதிகப்படியாக இருப்பதால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் குறிப்பிட்ட அளவிலான கோதுமை திறந்தவெளியில் சேகரிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் இவை பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும். நடப்பு ஆண்டில் கோதுமைக் கொள்முதலுக்கான இலக்கு 32 மில்லியன் டன்னாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், உற்பத்தி வலுவாக இருந்ததால் இலக்கை விட அதிகமான கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. கோதுமைக் கொள்முதல் பஞ்சாப் மாநிலத்தில் 12.69 மில்லியன் டன்னாகவும், ஹரியானாவில் 8.7 மில்லியன் டன்னாகவும், மத்தியப் பிரதேசத்தில் 7.28 மில்லியன் டன்னாகவும், உத்தரப் பிரதேசத்தில் 4.80 மில்லியன் டன்னாகவும், ராஜஸ்தானில் 1.51 மில்லியன் டன்னாகவும் இருந்துள்ளது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon