மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாஜக இப்தார் விருந்து!

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாஜக இப்தார் விருந்து!

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இன்று காங்கிரஸ் கட்சி இப்தார் விருந்து அளிக்கவுள்ள நிலையில், முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் சார்பாக இப்தார் விருந்து வழங்கப்படவுள்ளது.

டெல்லி தாஜ் ஹோட்டலில் இன்று (ஜூன் 13) காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இப்தார் விருந்து அளிக்கவுள்ளார். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சரத் பவார், சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சீதாராம் யெச்சூரி, தேஜஸ்வி உட்பட பல கட்சிகளைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் ராகுலின் விருந்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத் தலைவர்கள் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றியவர்களும் இதில் கலந்துகொள்கின்றனர். சமீபத்தில் ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்துகொண்டு சர்ச்சைக்குள்ளான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்த இப்தார் விருந்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பாஜகவின் சார்பாகவும் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று நடத்தும் ரம்ஜான் விருந்தில், முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முத்தலாக் முறைக்குத் தடை விதித்து, அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். கடந்த ஆண்டு மட்டும், இந்த தீர்ப்புக்கு முன்னால் முத்தலாக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக 177 வழக்குகளும், தீர்ப்புக்குப் பின்னர் 70 வழக்குகளும் நீதிமன்றங்களில் பதிவாகின. முத்தலாக் தொடர்பான சட்ட மசோதா மக்களவையில் வெற்றி பெற்றபோதும், மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்படவில்லை. அம்மசோதாவானது தற்போது காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று, இந்த ஆண்டிலிருந்து இப்தார் விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தது குடியரசுத் தலைவர் மாளிகை. மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக வரி செலுத்துவோரின் பணம் விரயம் செய்யப்படக் கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதே இதற்குக் காரணம். இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில், முத்தலாக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இப்தார் விருந்து நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நக்வி.

அதே நேரத்தில், வாக்கு வங்கி அரசியல் நடத்துபவர்கள் தான் இப்தார் விருந்தளிப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டார் ஹைதராபாதைச் சார்ந்த பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் லோத். தான் இப்தார் விருந்து அளிக்க மாட்டேன் என்றும், மற்றவர்கள் அளிக்கும் விருந்துகளில் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்தார். அவர் மீது எதிர்க்கட்சியினர் சார்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் இன்று நக்வி அளிக்கும் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon