மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

நிலங்களைக் கையகப்படுத்தும் தாசில்தார்கள்!

நிலங்களைக் கையகப்படுத்தும் தாசில்தார்கள்!

எட்டு வழிப் பசுமைச் சாலைகளுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் திருவண்ணாமலையில் நிலங்களைக் கையகப்படுத்த 6 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சுமார் 274 கிலோ மீட்டர் தூரத்துக்கு எட்டு வழிப் பசுமை விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மலைகள், விவசாய நிலங்கள், பல்வேறு கட்டுமானங்கள் அழிக்கப்படவுள்ளன. இதனால் சிறு, குறு விவசாயிகள் ஏராளமானோர் பாதிக்கப்படவுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களும் விவசாயிகளும் போராடிவருகின்றனர். எனினும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

அதன்படி, திருவண்ணாமலையில் நிலங்கள், கட்டிடங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ளப் பகுதி வாரியாக 6 தாசில்தார்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் மேலாளராக இருந்த தாசில்தார் உதயகுமார், ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக இருந்த கோபு ஆகியோர் செங்கத்திற்கும், திருவண்ணாமலை தனி தாசில்தாராக இருந்த ரவி, சேத்துப்பட்டில் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாராக இருந்த தமிழ்மணி ஆகியோர் சேத்துப்பட்டிற்கும், செய்யாறு கோட்ட கள அலுவலராக இருந்த பாஸ்கர், ஜமுனாமரத்தூர் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலராக இருந்த சுதாகர் ஆகியோர் செய்யாறு பகுதிக்கும் நிலங்களைக் கையகப்படுத்த நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிலத்தை கையகப்படுத்தும் பணியை உடனே தொடங்குமாறு அம்மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூன் 13) உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் நிலங்களை ஆய்வு செய்துவருகின்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை மீறி ஆய்வு நடத்தப்படுவதாகவும், தங்களை மிரட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நேற்று சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்தில், நில உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம், நிலம் எடுப்பு தாசில்தார் சுந்தர்ராஜன், தனிதாசில்தார் சேலம் பத்மபிரியா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது நிலவாரப்பட்டி, பனைமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.1 கோடிக்கு மேல் விலைக்குப் போகிறது. ஆனால் தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.8 லட்சம் வழங்குவதாகக் கூறுகிறது. இது போதாது என்று விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயத்தை அழித்து அமைக்கப்படுவது பசுமை வழிச் சாலையா என்றும் கேள்வி எழுப்பிய விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்துச் சென்றனர்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon