மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ஆதிவாசிகள் மீது சித்தரிப்பு வழக்குகள்!

ஆதிவாசிகள் மீது சித்தரிப்பு வழக்குகள்!

மூன்றில் ஒரு பங்கு ஆதிவாசிகள் மீது மாவோயிஸ்ட்டுகள் என சித்தரித்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காமன் காஸ் மற்றும் லோக்நிதி என்ற இரு அரசு சாரா அமைப்புகள் போலீசாரைக் கண்டு அஞ்சும் மக்கள் பிரிவினர் யார் என்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களில் கணிசமான ஒரு பிரிவினர் தாங்கள் எப்போது வேண்டுமானலும் மாவோயிஸ்ட்டுகளாக சித்தரி்க்கப்பட்டு வழக்குகள் தொடரப்படலாம் அல்லது சிறு குற்றங்கள் செய்ததாக வழக்குகள் தொடரப்படலாம் என்று அஞ்சுகின்றனர்.

இதே போன்று சமூகச் செயல்பாட்டாளர்களின் மத்தியிலும் அச்சம் நிலவுகிறது. மாநிலத்தின் நலன்களுக்காகவோ அல்லது மக்களின் நலன்களுக்காகவோ அவர்கள் குரல் எழுப்பும்போது பொய் வழக்குகள் போடுவது சாதாரணமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரலில் ஒடிசாவிலும் ஜார்க்கண்ட்டிலிலும் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக பாடுபட்ட இரண்டு சிவில் உரிமை அமைப்புகள் மீது, அந்த அமைப்புகள் மாவோயிஸ்ட் கட்சியின் வெகுஜன முன்னணி அமைப்புகளாக செயல்படுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது.

போலீசாரைக் கண்டு 27 விழுக்காடு ஆதிவாசிகளும் 35 தலித்களும் அஞ்சுவதாகக் கூறியுள்ளனர்.

இவ்வாறு அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வானது 22 மாநிலங்களில் 5563 பேரிடம் நடத்தப்பட்டது. 2017இல் நடத்தப்பட்ட ஆய்வில் தலித்கள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லீம்கள் ஆகியோரின் போலீஸ் துறை குறித்த அச்சம், காவல் நிலையங்களில் நடத்தப்படும் விசாரணை முறைகள் குறிப்பாக சித்ரவதை ஆகியன குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் தலித் மக்களில் ஐந்தில் இருவர் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சிறு குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள் கீழ் தங்கள் மீது பொய் வழக்கு போடப்படுவதாக கூறினா். 28 விழுக்காட்டினர் இது போன்ற வழக்குகள் தங்கள் மீது போடப்படுவதை ஏற்றுக்கொண்டனர்.

பிகார், ஜார்க்கண்டு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இத்தகைய நிலைமை உள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon