மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

அறிமுகமாகும் வாரிசு நடிகை!

அறிமுகமாகும் வாரிசு நடிகை!

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

திருமணமாகி ஓமனில் வாழ்ந்துவந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தாமதமாக திரைத் துறைக்குள் நுழைந்தாலும் துணை நடிகையாக வலம்வந்து இயக்குநராகவும் தன்னை நிரூபித்துள்ளார். இருப்பினும் அவரை பெருவாரியான மக்களிடம் கொண்டு சென்றது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிதான். பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய அந்நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து லட்சுமி இயக்கும் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2012ஆம் ஆண்டு வெளியான ஆரோகணம் திரைப்படம் குறைந்த பொருட்செலவில் வலுவான கதைக் களத்துடன் உருவாகி கவனம் பெற்றது. அந்தப் படத்தில் விஜி சந்திரசேகர் பிரதான வேடம் ஏற்று நடித்திருந்தார். பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தாலும் விஜியின் திரை வாழ்வில் ஆரோகணம் முக்கியமான படமாக அமைந்தது.

தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் மூலம் விஜியின் மகளான லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். லவ்லினின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்து கதாபாத்திரத் தேர்வுக்காக அழைத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதிலும் பிடித்துப்போக உடனே லவ்லினை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். ராதா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

லவ்லின் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாவது குறித்து கடந்த இரு ஆண்டுகளாக செய்திகள் வலம் வந்தபோதும் அவை கைகூடாமல் போனது. தொடர்ந்து ஃபேஷன் ஷோக்களில் தலைகாட்டி வந்த அவரை திரையில் பார்க்கும் நாள் நெருங்கிவிட்டது.

“எனது மகளை இந்த அருமையான சினிமா உலகத்திற்குத் தருகிறேன். இந்த பெரிய வாய்ப்பை அளித்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நன்றி” என விஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள லட்சுமி, “நடிகர்கள் எப்போதுமே கலைஞர்கள்தான், மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஆவலுடனும் இந்த துறைக்குள் அவர் நுழைகிறார். ரசிகர்கள் அவரையும் அவரது உழைப்பு, திறமையையும் விரும்புவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon