மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

நேரடிக் கண்காணிப்பில் கிராமப்புறத் திட்டம்!

நேரடிக் கண்காணிப்பில் கிராமப்புறத் திட்டம்!

நாடு முழுவதும் உள்ள 45,000 கிராமங்களில் செயல்படுத்தப்படும் 7 திட்டங்களைப் பிரதமர் அலுவலக அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்பதாகக் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 115 மாவட்டங்களில் சுமார் 45,000 கிராமங்களில் 7 முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு மற்றும் வேளாண் துறை ஆகிய முக்கிய ஐந்து துறைகளும் அடங்கும். இந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் நேரடியாகக் கவனித்து வருகின்றனர். தற்போது இரண்டாம் கட்டமாகக் கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ”45,000 கிராமங்களையும் பார்வையிட 750 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15 வரையில் ஒவ்வொரு அதிகாரியும் 75 கிராமங்கள் வரை சென்று குறைந்தபட்சமாக மூன்று முறையாவது பார்வையிடுவார்" என்று கூறியுள்ளார். இந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு அறை டெல்லியில் உள்ள கிரிஷி பவனில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பீகாரில் உள்ள 8,569 கிராமங்களிலும், மேற்கு வங்கத்தில் 7,981 கிராமங்களிலும், ஜார்க்கண்டில் 6,512 கிராமங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 3,048 கிராமங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் நிலவும் வறுமையை ஒழிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 16,000க்கும் அதிகமான கிராமங்களில் முதற்கட்டமாக 10.29 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க பெட்ரோலிய அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 7.77 லட்சம் இணைப்புகள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளன.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon