மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்: எய்ம்ஸ்!

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்: எய்ம்ஸ்!

கடந்த 48 மணி நேரங்களில் வாஜ்பாயின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அடுத்த ஒரு சில நாட்களில் அவர் பூரண நலம் பெறுவார் என நம்புவதாக எய்ம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாகவே முதுமை காரணமாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில், “வாஜ்பாய்க்குப் பரிசோதனை செய்ததில் அவருக்குச் சிறுநீர் பாதை தொற்றுஇருப்பது தெரியவந்துள்ளது. எனவே அதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. அவரது உடல்நிலையை மருத்துவக் குழு தீவிரமாகக் கண்காணித்துவருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா உள்ளிட்டவர்களும் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இன்று (ஜூன் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய், சிறுநீர் தொற்று, சிறுநீர் வெளியேற்றத்தில் சிக்கல், நெஞ்சு வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழு, அவருக்கு உரிய சிகிச்சை வழங்கியது. தற்போது, அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் பூரண குணமடைவார் என நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் வாஜ்பாய் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிறுநீர் தொற்று, சிறுநீர் வெளியேற்றத்தில் சிக்கல், நெஞ்சு வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 48 மணி நேரத்தில் அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவரது சிறுநீரகம் இயல்பாகச் செயல்படுகிறது. சிறுநீரக வெளியேற்றமும் சீராக உள்ளது. தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அவர் பூரண நலமடைவார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon