மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

டி வில்லியர்ஸின் இடத்தைக் குறிவைக்கும் வீரர்!

டி வில்லியர்ஸின் இடத்தைக் குறிவைக்கும் வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏபி டி வில்லியர்ஸின் இடத்தைப் பிடிக்க முயற்சித்துவருவதாக தென்னாப்ரிக்க வீரர் தெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்திருந்தார். இதனையடுத்து தென்னாப்ரிக்க டெஸ்ட் அணியில் டி வில்லியர்ஸ் களமிறங்கும் நான்காம் இடம் காலியானது. இந்த இடத்திற்கு ஏற்ற சரியான வீரரைத் தேடும் முயற்சியில் தற்போது தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. இந்நிலையில் டி வில்லியர்ஸின் இடத்தைப் பிடிக்க தான் முயற்சித்து வருவதாக தென்னாப்ரிக்க வீரர் தெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

தென்னாப்ரிக்காவின் தலைநகரான ப்ரிடோரியா நகரில் ப்ரோட்டாஸ் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், "டெஸ்ட் அணியில் தற்போது நான்காம் நிலை காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு எப்படியும் ஒருவர் வர வேண்டும். அதற்கான முயற்சியை நான் தொடங்கிவிட்டேன். தேர்வுக் குழுவினர் என்னைக் கண்டுகொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தென்னாப்ரிக்காவின் கறுப்பர் இனத்திலிருந்து வந்து சதமடித்த வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான தெம்பா பவுமா, சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். முன்னதாக 2016-17 காலகட்டத்தில் டி வில்லியர்ஸ் இடத்திற்கான மாற்று வீரராக ஜே.பி.டுமினி இருந்துவந்தார். கடந்த ஆண்டு இறுதியில் டுமினி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து அந்த இடம் தற்காலிகமாக குவிண்டன் டிகாக்கின் கைகளுக்குச் சென்றது.

இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தெம்பா பவுமா ஒரு சதம் உட்பட 1395 ரன்கள் எடுத்துள்ளார்.

முன்னதாக டி வில்லியர்ஸின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் அவரது ஓய்வு தென்னாப்ரிக்க அணிக்குப் பேரிழப்பு என்றும் தென்னாப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

(டி வில்லியர்ஸ் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்...)

டி வில்லியர்ஸ் எனும் சூப்பர்மேன்

மட்டை ஏந்திய மந்திரவாதி

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon