மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

மும்பை: அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ!

மும்பை: அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ!

மும்பை பிரபாதேவி பகுதியில் உள்ள பியல் மோண்டே அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பை வோர்லியில் உள்ள பிரபாதேவி என்ற இடத்தில், பியல் மோண்டே என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 33ஆவது தளத்தில் இன்று (ஜூன்13) பிற்பகல் 2 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தீயை அணைக்கச் சம்பவ இடத்துக்கு 6 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்தனர்.

ஸ்கை லிஃப்ட் என்ற உயர் ரக ஹைட்ராலிக் ஏணியும் வரவழைக்கப்பட்டு, குடியிருப்புக்களில் இருந்தவர்களைப் பத்திரமாக வெளியேற்றினர்.

முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸுகளும் வரவழைக்கப்பட்டன. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தக் குடியிருப்பின் 26ஆவது தளத்தில் நடிகை தீபிகா படுகோன் வீடு உள்ளது. பல திரையுலகப் பிரபலங்களும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள்.

தீ விபத்து குறித்து நடிகை தீபிகா படுகோன் ட்விட்டரில் “நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆபத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கு நாம் பிரார்த்தனை செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இது, மும்பையில் ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக நடக்கும் தீ விபத்தாகும். இதற்கு முன்பு இந்த மாதத்தின் தொடக்கத்தில் மும்பை வருமான வரித்துறை வளாகத்திலும் மற்றும் கடந்த 9ஆம் தேதி மும்பை கோட்டையில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் உள்ளேயும் பெரும் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon