மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

மகா கூட்டணிக்குத் தலைவர் யார்? நழுவிய ராகுல்

மகா கூட்டணிக்குத் தலைவர் யார்? நழுவிய ராகுல்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக, மிகப் பெரும் கூட்டணி (மகாகத்பந்தன்) அமையவுள்ளதாகத் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ஆனால், அதன் தலைவர் யார் என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கவில்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நோக்கில், நேற்று (ஜூன் 12) அங்கு சென்றார் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி. அங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அதன் பின், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்துப் பேசினார். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக அவதூறாகப் பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இன்று (ஜூன் 13) காலை, மும்பையிலுள்ள பாந்த்ராவில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். கட்சியின் தலைவரான பின்பு, ராகுல் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பானது 2.45 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட செய்தியாளர்கள் பலர், இதனால் அதிருப்தியடைந்தனர்.

தனது பேச்சின் தொடக்கத்திலேயே, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் செயல்பாடுகளை விமர்சித்தார் ராகுல். அரசியலமைப்புக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டுவருவதாகவும், பல அமைப்புகளின் சுதந்திரத்தில் அது தலையிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைத் தோற்கடிக்கும் வகையில் மகா கூட்டணியை உருவாக்குவதென்பது நாட்டு மக்களின் மன உணர்வு. இது அரசியல் கட்சிகளின் எண்ணம் மட்டுமல்ல” என்று தெரிவித்தார். ஆனால், இந்த கூட்டணிக்குத் தலைமை தாங்குவது யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. சிறிது நேரம் மவுனமாக இருந்தவர், தொடர்ந்து பாஜக மற்றும் மோடியை எதிர்த்துப் பேசத் தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய ராகுல், பண மதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியினால் மும்பை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எப்படி நிறுத்துவது என்று கேள்வி எழுந்துள்ளதாகவும், அதற்குப் பதிலளிக்கும் வகையில் எதிர்க் குரல்களை காங்கிரஸ் கட்சி ஒன்றுதிரட்டி வருவதாகவும் பேசினார் ராகுல். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருமாறு எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தபோதும், பிரதமர் மோடி மவுனித்து இருப்பதாக விமர்சித்தார்.

தனது பேச்சை முடித்ததும், அங்கிருந்து அவர் கிளம்பினார். இதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்களைச் சமாதானப்படுத்தினார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் நிருபம். நாக்பூர் மற்றும் நந்தெத் பகுதிகளுக்கு அடுத்தடுத்து ராகுல் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அதனை முன்னிட்டுச் செய்தியாளர் சந்திப்பைத் திட்டமிட மக்கள் தொடர்புக் குழு தவறிவிட்டதாகவும், பின்னர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.

இன்று மதியம், நெல் விவசாயத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய விஞ்ஞானி மற்றும் தலித் செயல்பாட்டாளர் தாதாஜி கோப்ரகடேவின் குடும்பத்தினரைச் சந்தித்தார் ராகுல். கடந்த மாதம் கோப்ரகடே உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் நோக்கில், அவர் நந்தெத் சென்றார்.

இன்று மாலை டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான இப்தார் விருந்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள நிலையில், மகா கூட்டணிக்கான தலைவர் யார் என்று சொல்லாமல் ராகுல் நழுவியது முக்கியத்துவம் பெறுகிறது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon