மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

குற்றங்களைத் தடுக்க ஆணையரின் புதிய திட்டம்!

குற்றங்களைத் தடுக்க ஆணையரின் புதிய திட்டம்!

சென்னையில் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுக்க ஷிஃப்ட் முறையில் காவலர்களுக்கு பணி வழங்கப்படவுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெண்கள் தனியாகச் செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவருகிறது. செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. ஜூன் 10ஆம் தேதி மட்டும் 14 வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன. இது ஒருபுறம் இருக்க, இளைஞர்கள் இரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டு சிலர் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றனர்.

இது போன்ற குற்றங்களைத் தடுக்க முழு நேரமும் காவல் பணியில் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர் எனத் தெரிவித்த ஆணையர் விஸ்வநாதன், ”காவல் துறையினர் ஷிஃப்ட் முறையில் பணியாற்றுவார்கள். இந்த நடைமுறை வருகிற 30ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

சென்னையில் தினமும் நான்கு காவல் இணை ஆணையர்களில் ஒருவர் நேரடி இரவு ரோந்துப் பணியில் இருக்க வேண்டும். இது தவிர துணை ஆணையர்களுக்கும் தனிப் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஒரு ஷிஃப்ட்டும், அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை ஒரு ஷிஃப்ட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியில் கூடுதலான காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்தப் பணியில் சட்டம் ஒழுங்கு காவலர்கள், குற்றப்பிரிவு காவலர்கள், மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் ஈடுபடவுள்ளனர். இரவில் மட்டும் 6 காவல் துணை ஆணையர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். ஷிஃப்ட் முறையில் சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் காவல் உதவி ஆணையர் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளர், மூன்று காவல் உதவி ஆய்வாளர்கள், 6 தலைமைக் காவலர்கள் என 30 காவலர்கள் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் ஆணையர்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon