மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

உலகின் அதிவேக கணினி!

உலகின் அதிவேக கணினி!

உலகின் வேகமான கணினியைக் கொண்ட நாடு என்ற பெருமை தற்போது அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் என்விடியா இணைந்து இந்த அதிவேக சூப்பர் கணினியை வடிவமைத்துள்ளது.

`சம்மிட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் கணினியை அமெரிக்க ஆற்றல் துறையின் கீழ் (US Department of Energy) இயங்கிவரும் Oak Ridge National Laboratory நிறுவனம் கடந்த வெள்ளியன்று (ஜூன் 8) வெளியிட்டுள்ளது.

ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கின்னி ரோமெட்டி சிஎன்பிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "எங்களது மிகப்பெரும் சாதனையில் இதுவும் ஒன்று. உலகின் மிக விரைவான மற்றும் புத்திசாலியான சூப்பர் கணினி இதுவாகும். இதனை உருவாக்க நான்கு ஆண்டு காலம் ஆயிற்று. அமெரிக்காவின் முந்தைய அதிவேக கணினியான டைட்டனை விட எட்டு மடங்கு அதிக திறன் கொண்டது இந்த சம்மிட்" என்று கூறியுள்ளார்.

இந்த சூப்பர் கணினி, 37ஆயிரம் பிராசசர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைக் குளிர்விக்க ஒரு நிமிடத்திற்கு 4000 கலூன் அளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது. இந்திய அளவீடுகளின் படி சுமார் 15 ஆயிரம் லிட்டர்கள். மேலும் இது ஒரு நொடிக்கு 200 குவாட்ரில்லியன் கணக்கீடுகளைச் செய்யும் திறன் வாய்ந்தது. (குவாட்ரில்லியன் என்றால் என்ன என்பதைக் கூகுளில் தேடித் பார்த்தல் சற்று தலைசுற்றியது. 200ஐ தொடந்து 15 பூஜ்யங்கள் கொண்ட இலக்கம்.)

ஒரு நொடிக்கு ஒரு கணக்கீட்டை செய்யும் மனிதன், சம்மிட்டின் ஒரு நொடி வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் அவர் குறைந்தது ஆறு பில்லியன் வருடங்கள் உயிர்வாழ வேண்டும். இது சீனாவின் முந்தைய அதிவேக கணினியின் வேகத்தை விட இரண்டு மடங்கு வேகமாகும். இந்தக் கணினியின் சர்வர்களின் (servers house) அளவு இரண்டு டென்னிஸ் கோர்ட்டின் அளவிற்குச் சமமானது.

குறிப்பு: சூப்பர் கணினிகள் தொடர்ச்சியாகப் பல மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் அதிவேக சூப்பர் கணினியைக் கொண்ட நாடு என்ற பெருமை எப்பொழுதும் ஒரு நாட்டிடம் மட்டும் இருப்பதில்லை.

முன்னதாக உலகத்தின் அதிவேக கணினியை வைத்திருந்த பெருமை சீனாவிடம் ஐந்து ஆண்டுகள் இருந்தது. இந்நிலையில் தற்போது சம்மிட்டின் வரவை அடுத்து சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா அந்த பெருமையைப் பெற்றுள்ளது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon