மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

விவாதப் பொருளாக மாறிய ஜிப்ரான்

விவாதப் பொருளாக மாறிய ஜிப்ரான்

சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் 2 பட ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்களில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பெயர் முகமது ஜிப்ரான் என்று இடம்பெற்றிருந்தது. இந்த மாற்றம் தொலைக்காட்சி விவாதமாக மாறியுள்ளது.

2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்து, தயாரித்த படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் பல தடைகளைத் தாண்டி படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகியது. இப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டனர். ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்து விவாதப் பொருளாக மாறியிருக்கிறது விஸ்வரூபம் 2.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் “விஸ்வரூபம் 2 சர்ச்சைகள் வேண்டுமென்றே கிளப்புகிறாரா கமல்” என்கிற தலைப்பில் ஜூன் 12ஆம் தேதி விவாதம் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஜிப்ரான் பெயர் முகமது ஜிப்ரானாக மாறியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த விவாதத்தில் தொலைபேசி வழியாக ஜிப்ரான் அளித்த பேட்டியில், “என்னுடைய இந்தப் பெயர் மாற்றம் விவாதமாக மாறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இது என் தனிப்பட்ட விஷயம். வாகை சூடவா படத்தின்போது என் பெயர் ஜிப்ரான் என்றுதான் இருந்தது. விஸ்வரூபம் பட வாய்ப்புகள் எனக்கு வந்தபோது நோன்பில் இருந்தேன். அதேபோல் நோன்பின்போது விஸ்வரூபம் 2 பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கமல் சாருடன் இணைந்து பல படங்கள் பணிபுரிந்திருப்பது என் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இறைவனின் அருளில்தான் இது நடந்துள்ளது. எனவே என் விருப்பத்தின் பேரில் கடவுளுக்கான சமர்ப்பணமாக இந்தப் பெயரை வைத்துக்கொண்டுள்ளேன். ஆனால் இது இவ்வளவு தூரம் சர்ச்சையாகிறது என்கிறபோது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இது விஸ்வரூபம் 2 படத்துக்காக மாற்றிக்கொண்ட பெயர் அல்ல” என்று கூறியுள்ளார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon