மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

எம்ஜிஆர் 100 நெல் ரகம் அறிமுகம்!

எம்ஜிஆர் 100 நெல் ரகம் அறிமுகம்!

பாரம்பரிய நெல் சாகுபடியில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு எம்ஜிஆர் விருது உட்பட 32 அறிவிப்புகளை நேற்றைய கூட்டத்தின்போது அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று (ஜூன் 12) பதிலளித்து பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

*தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ‘எம்ஜிஆர் 100’ என்ற புதிய உயர் விளைச்சல் சன்ன ரக நெல், ரூ.1 கோடியே 19 லட்சத்தில் பிரபலப்படுத்தப்படும்.

*இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை இயற்கை வேளாண் மண்டலமாக அறிவித்து, ரூ.5 கோடியில் முற்றிலும் ரசாயனமற்ற இயற்கை வேளாண்மை பரவலாக்கப்படும்.

*பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து, சாகுபடி செய்து மாநில அளவில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு ‘எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்’ விருதுடன் முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரமும் வழங்கிக் கவுரவிக்கப்படும்.

*தரமான விதைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 10 மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்கு வசதி 11 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்த நடப்பாண்டில் ரூ.6.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*தமிழகத்தில் வெங்காய சாகுபடியை ஊக்குவிக்கவும், குறைந்த செலவில் வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கவும் நடப்பாண்டில் ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*கிராமப்புற இளைஞர்களைத் தோட்டக்கலையில் ஈடுபடுத்தும் வகையில் தோட்டக்கலை அறிவியல் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக நடப்பாண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*விவசாயிகள், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பாதுகாப்பான முறையில் கையாளுவதற்காக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பொருள்களுடன் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சிக்காக ரூ.2.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*விழுப்புரம் மாவட்டத்தில் அல்ட்ரா உணவு பூங்கா மற்றும் பெரிய அளவிலான 9 மெகா உணவு பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* தோட்டக்கலை துறையில் காலியாக உள்ள 376 தொழில்நுட்ப அலுவலர்கள் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் நிரப்பப்படும்.

என்பன உட்பட 32 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon