மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

திமுக களையெடுப்பு: சரண்டராகும் மா.செ.க்கள்!

திமுக களையெடுப்பு: சரண்டராகும் மா.செ.க்கள்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய கள ஆய்வில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது புகார் கொடுத்தவர்களிடம் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மிரட்டலாக சரண்டராகிவருகிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியை அடுத்து. கட்சியை வலுப்பெற வைக்கும் முயற்சிகளை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடங்கினார். இதன் ஒருபகுதியாக பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வு நடைபெற்றது. ஊராட்சி செயலாளர்கள் , பேரூராட்சி செயலாளர்கள் , நகர வார்டு செயலாளர்கள் , மாநகர வட்ட செயலாளர்கள், சென்னை மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட மற்றும் மாநகர கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் , ஒன்றிய செயலாளர்கள் , நகரச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைத்து நிலை நிர்வாகிகளையும் கள ஆய்வின்போது ஸ்டாலின் சந்தித்திருந்தார்.

அனைவரும் தங்களின் புகார்களைப் பயமின்றி தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டியும் கள ஆய்வின்போது வைக்கப்பட்டிருந்தது. கள ஆய்வில் குவிந்த புகார்களைக் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களை வைத்து விசாரித்து முக்கியமான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் பெயரை மட்டும் டைரியில் குறித்துக்கொண்டார்.

கள ஆய்வுக்குப் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாவட்ட செயலாளர்கள் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், ஜூன் 9ஆம் தேதி முதல் கட்சியில் களையெடுக்கும் பணியை துவங்கிவிட்டார் செயல் தலைவர் ஸ்டாலின்.

இதனால், அதிர்ச்சியான மாவட்ட செயலாளர்கள் பலர் தனது ஆதரவாளர்கள் மூலமாகப் புகார் கொடுத்தவர்களை அழைத்து சமாதானம் பேசிவருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் மீது கிளை செயலாளர்கள் மற்றும் நகர, வார்டு செயலாளர்கள், கள ஆய்வின் போது புகார் கொடுத்துள்ளார்கள்.

தற்போது களையெடுப்பு துவங்கியுள்ளதால் அதிர்ச்சியில் உள்ளார் செங்குட்டுவன். இதற்கிடையே, அவருடைய ஆதரவாளரும் இளைஞர் அணி துணை செயலாளருமான அசலாம், மா.செ, மீது புகார் கொடுத்த கிருஷ்ணகிரி நகர வர்த்தக பிரிவு துணை அமைப்பாளர் ஆனந்தனைக் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த உரையாடல் பின்வருமாறு:

அசலாம்: ஹலோ ஆனந்தா எங்கடா இருக்குற?

ஆனந்த்: வீட்டில்தான் அண்ணா இருக்கிறேன்.

அசலாம்: ஒண்ணுமில்லை, தலைமைக் கழகத்திலிருந்து கூப்பிட்டாங்கனா, எனக்கு தெரியாதுங்க நவாப் (நகரச் செயலாலர்) வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கினார் என்று சொல்லிடு. என்கிட்ட எம்.எல்.ஏ. பேசினார். மாத்திக் கீத்தி பேசிடாதே. மூன்று வழக்கறிஞர்கள் ஒரு எம்.எல்.ஏ. வருவார்கள் விசாரிப்பார்கள் கவனமாகச் சொல்லணும் என்று போகிறது இந்த ஆடியோ.

தற்போது இந்த ஆடியோவையும் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, நகரச் செயலாளர் நவாப்பிடம் மாவட்ட செயலாளர்களின் ஆட்கள் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள் கிருஷ்ணகிரி துணை அணிப் பொறுப்பாளர்கள்.

கிருஷ்ணகிரி போலவே தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள் புகார் கொடுத்தவரைத் தேடி கெஞ்சி வருகிறார்களாம்.

களையெடுப்பால் ரத்தான கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம்!

இதற்கிடையே புகார்களுக்கு உள்ளானவர்களுக்கே மீண்டும் பதவி கொடுக்கப்பட்டிருப்பதும் திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த பார் இளங்கோவன் நீக்கப்பட்டு அம்மாவட்டத்தின் புதிய பொறுப்பாளராக ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருந்த காந்திசெல்வனை மீண்டும் நியமித்தார் ஸ்டாலின்.

இதுதான் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டச் செயலாளர் மாற்றத்தால் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டமே ரத்து செய்யப்பட்டது.

10ஆம் தேதி மாலை நாமக்கல் பஸ்நிலையம் அருகே நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக, திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும்,சூர்யா வெற்றிகொண்டானும் சிறப்பு பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இருவரும் அன்று காலையே நாமக்கல் வந்துவிட்டனர். இந்நிலையில் அன்று பகலில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் பார் இளங்கோவன் நீக்கப்பட்டார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட அவர், பொதுக்கூட்ட வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு மோகனூர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேடை போட்டதோடு சரி, மைக் செட் போடவில்லை, நாற்காலிகளும் போடப்படவில்லை. இதற்கிடையே புதிதாக பொறுப்பாளராக போடப்பட்ட காந்திசெல்வனிடம் சில நிர்வாகிகள் இன்று பொதுக்கூட்டம் இருக்கிறது என்பதை எடுத்துக் கூறினர். அவர் சில முயற்சிகள் எடுத்தும் கூட்டம் நடக்க ஏதுவான சூழல் உருவாகவில்லை. நகர செயலாளர் மணிமாறனிடம் ஆர்.எஸ்.பாரதி பேசினார். அன்று மாலை பொதுக்கூட்டம் நடந்தால் பார் இளங்கோவன் தரப்பும், காந்திசெல்வன் தரப்பும் கடுமையாக மோதிக் கொள்ளும் என்று அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தகவல்கள் வர,. உடனடியாக கூட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார். அதனால் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அன்று மாலை 6.30 மணிக்கு ஆர்.எஸ்.பாரதியும், சூர்யா வெற்றிகொண்டானும் நாமக்கல்லில் இருந்து புறப்பட்டனர்.

“காந்தி செல்வன் மீது பல புகார்கள் இருந்த நிலையில் மீண்டும் அவரையே மாவட்டப் பொறுப்பாளராக போட்டதன் மூலம் தலைவர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமே ரத்தாகியிருக்கிறது. இதைவிட கட்சிக்கு ஒரு அவமானம் தேவையா? ’’ என்று கொதிக்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

புதிய மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காந்தி செல்வன் இன்று (ஜூன் 13) அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் கறிவிருந்து வைத்தார். அதில் முன்னாள் மா.செ. பார் இளங்கோவன் கலந்துகொள்ளவில்லை.

நாமக்கல்லில் மீண்டும் கோஷ்டிப் பூசல் தலை தூக்கிவிட்டது!

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon