மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ஸ்ரீ லீக்ஸ்: வலுக்கும் குற்றச்சாட்டுகள்!

ஸ்ரீ லீக்ஸ்: வலுக்கும் குற்றச்சாட்டுகள்!

தன்மீது கூறியுள்ள புகாருக்கு நடிகை ஸ்ரீ ரெட்டி விரைவில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகர் நானி, ஸ்ரீ ரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பட வாய்ப்பு தர, நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி குற்றம்சாட்டினார். ஸ்ரீலீக்ஸ் ஃபேஸ்புக் பக்கத்தில், செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் என்று இயக்குநர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகர் நானி போன்றவர்களின் பெயர்களைத் தொடர்ந்து வெளியிட்டார். இந்த நிலையில், நடிகர் நானிமீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டுகளை ஸ்ரீ ரெட்டி கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நானி, ஒரு நடிகையின் வாழ்க்கையைக் கெடுத்து நரகத்தில் தள்ளிவிட்டார். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்கக்கூடியவர் என்று ஏற்கனவே ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் தெலுங்கில் நானி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீ ரெட்டியைக் கலந்துகொள்ளவிடாமல் தடுத்ததாகத் தகவல் வெளியானது.

இதனால் ஆத்திரமான ஸ்ரீ ரெட்டி,“நானி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடந்துகொண்டார். என்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்ய நானி தயாரா? எனக்கு வரும் வாய்ப்புகளைத் தடுக்கிறார். எனது பாவம் அவரைச் சும்மா விடாது” என மீண்டும் அவர் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “என்மீது ஸ்ரீ ரெட்டி அவதூறுகள் பரப்பிவருகிறார். அதில் உண்மை இல்லை. இத்தகையை செயல்கள் வருத்தம் அளிக்கின்றன. எனது நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்புவதை அவர் நிறுத்த வேண்டும். இதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். ஒரு வாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து நானியின் மனைவி அஞ்சனா, “திரைத்துறையில் சிலர் தங்களுக்கான விளம்பரங்களைத் தேடிக் கொள்வதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இதை யாரும் நம்பமாட்டார்கள். காரணம், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானது என அனைவருக்கும் தெரியும்” என தன் கணவர் நானிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon