மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

கர்நாடக இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி!

கர்நாடக இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி!

கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மே 12ஆம் தேதியன்று, கர்நாடக மாநிலத்திலுள்ள 222 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ஜெயநகர் தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. இங்கு, மே 28ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்பட்டது.

ஜெயநகர் தொகுதியில், கடந்த மே 4ஆம் தேதியன்று தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்தார் பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார். பெங்களூருவிலுள்ள மருத்துவமனைக்கு, அவர் உடனடியாகக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அவர் மாரடைப்பினால் இறந்ததாக அறிவித்தனர் மருத்துவர்கள். இதனால், அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்தது தேர்தல் ஆணையம். ஜூன் 11ஆம் தேதியன்று அங்கு தேர்தல் நடைபெறுமெனவும் அறிவித்தது.

விஜயகுமாரின் சகோதரர் பி.என்.பிரகலாத்தை, இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்தது பாஜக தலைமை. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியானது தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் சவும்யா ரெட்டி போட்டியிட்டார். நேற்று முன்தினம் (ஜூன் 11) ஜெயநகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 55 சதவீத வாக்குகள் இங்கு பதிவானது. இத்தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி, இன்று (ஜூன் 13) பெங்களூருவில் நடைபெற்றது. இதன் முடிவில், காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவும்யா ரெட்டி 54,457 வாக்குகளும், பிரகலாத் 51,568 வாக்குகளும் பெற்றனர்.

மே 12 ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் 78 இடங்களைப் பெற்றது காங்கிரஸ் கட்சி. ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் முனிரத்னா மற்றும் ஜெயநகர் தொகுதியில் சவும்யா ரெட்டி பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே 28ஆம் தேதியன்று ஜம்கந்தி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான சித்து நியாமகவுடா சாலை விபத்தொன்றில் பலியானார். அத்தொகுதி குறித்து, இதுவரை தேர்தல் ஆணையம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon