மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ஜாக்கியுடன் இணையும் ஜான் சினா

ஜாக்கியுடன் இணையும் ஜான் சினா

ஜாக்கி சான், ஜான் சினா இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் தயாராகி வருகிறது.

சினிமா, கால்பந்து, போன்று மல்யுத்தத்திலும் முன்னிலையில் உள்ள வீரர்களை சூப்பர் ஸ்டார்களாகக் கொண்டாடும் போக்கு உலகம் முழுவதும் உள்ளது. மல்யுத்தப்போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வீரர்கள் ஹாலிவுட்டை நோக்கி நகர்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மல்யுத்தப் போட்டிகளில் ஆடும் காலங்களிலேயே இவர்களுக்குத் திரைப்பட வாய்ப்புகள் குவிகின்றன. ஹாலிவுட்டில் எடுக்கப்படும் அதிகமான ஆக்‌ஷன் படங்களுக்கு இவர்கள் பொருத்தமாக இருப்பதோடு இவர்களது பிரபலம் படத்திற்கான வியாபாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ட்வைன் ஜான்சன், பட்டிஸ்டா, காளி, ஜான் சினா, கெய்ன், ஸ்டீவ் ஆஸ்டின் என இந்த பட்டியல் நீளமானது.

2006ஆம் ஆண்டிலிருந்து ஜான் சினா ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் நிலையில் தற்போது ஜாக்கி சான் நடிக்கும் ‘ப்ராஜக்ட் எக்ஸ்’ படத்தில் அவரோடு இணைந்து நடிக்கவுள்ளார்.

‘எக்ஸ்-பாக்தாத்’ எனப் பெயரிடப்பட்டு இப்படத்தின் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட சில்வெஸ்டர் ஸ்டாலன் வெளியேற அந்த கதாபாத்திரத்திற்கு ஜான் சினா ஒப்பந்தமாகியுள்ளார். அரஷ் அமெல் திரைக்கதை அமைக்க ஸ்காட் வாக் இயக்குகிறார்.

சீனாவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான ஜாக்கி சான், ஜான் சினாவுடன் இணைந்து எண்ணெய் கடத்தலை தடுக்கும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜோ டம், எஸ்மண்ட் ரென், ஹேன்ஸ் கனோஸா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜாக்கிசான், ஜான் சினா இணைந்து நடிப்பதால் இருவரது ரசிகர்களும் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon