மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ஊரகப் பகுதிகளிலும் வங்கிச் சேவைகள்!

ஊரகப் பகுதிகளிலும் வங்கிச் சேவைகள்!

இந்தியாவில் அடுத்த 8-9 மாதங்களுக்குள் 2.9 லட்சம் பொது சேவை மையங்கள் மூலமாக ரயில்வே டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய அனுமதிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஜூன் 11ஆம் தேதியன்று மத்திய ரயில்வேத் துறையும், தகவல் தொழில்நுட்பத் துறையும் கையெழுத்திட்டன.

இதன்படி, 2.9 லட்சம் பொது சேவை மையங்களும் தொழில்நுட்ப ரீதியாக இணைக்கப்பட்டு ரயில்வே டிக்கெட் பதிவு செய்துகொள்வதற்கான வசதி வழங்கப்படும். தற்போது, சுமார் 40,000 பொதுச் சேவை மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த 8-9 மாதங்களுக்குள் அனைத்துப் பொது சேவை மையங்களும் இணைக்கப்பட்டு ரயில் டிக்கெட் பதிவு சேவைகள் பரவலாக வழங்கப்படும் என்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஐஆர்சிடிசிக்கும் பொதுச் சேவை மையங்களுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தச் சேவை மையங்கள் நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் அரசு சேவைகளை வழங்கி வருகின்றன. தற்போது இந்த மையங்கள் மூலமாக ரயில் டிக்கெட்டுகளைப் பதிவு செய்தும், முன்பதிவு செய்தும் கொள்ளலாம்.

அனைத்து 2.9 லட்சம் பொதுச் சேவை மையங்களையும் வங்கிச் சேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கவும், ஊரகப் பகுதிகளில் வங்கிச் சேவைகளையும் நிதிச் சேவைகளை வழங்க முயற்சி செய்யப்போவதாக பியூஷ் கோயல் தெரிவித்தார். பொதுச் சேவை மையங்கள் மூலமாக நிதிச் சேவைகளை வழங்குவதற்கான முன்மொழிதலுக்குத் தேவையான வேகத்தையும், திறன்களையும் இதர உதவிகளையும் வழங்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்திடம் ரயில்வேத் துறை அமைச்சரான பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon