மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

வெடிகுண்டு வீசுபவர்கள் வேல்முருகன் கட்சியினரா?

வெடிகுண்டு வீசுபவர்கள் வேல்முருகன் கட்சியினரா?

கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக டாஸ்மாக் கடைகளிலும் அரசுப் பேருந்திலும் வெடிகுண்டு தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் மாவட்ட மக்கள் பீதியில் இருக்கிறார்கள், காவல் துறையினர் டென்ஷனில் உள்ளனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க கடந்த மாதம் 25ஆம் தேதி தூத்துக்குடிக்குப் புறப்பட்ட நிலையில் வேல்முருகனை கைது செய்த காவல்துறையினர், அவரை மேலும் சில வழக்குகளில் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

வேல்முருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டதைக் கண்டித்தும் உடனே விடுதலைசெய்யவேண்டும் என வலியுறுத்தி ஜூன் 8ஆம் தேதி கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்பாட்டம் நடந்த அதே நாளில் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடையை சிலர் உடைத்தார்கள். கடையை உடைத்தவர்களைக் காவல் துறையினர் உடனடியாகக் கைதுசெய்தனர்.

ஜூன் 10ஆம் தேதி கடலூர் கம்பியாபேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைமீது சிலர் பெட்ரோல் வெடிகுண்டு வீசினார்கள். இந்த சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் வேல்முருகனின் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று கடலூர் போலீஸார் கருதுகின்றனர். அதைத் தொடர்ந்து கடலூர் எஸ்.பி.விஜயகுமார் ஓப்பன் மைக்கில் கடுமையாகப் பேசியவர், ‘மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பத்து பேரைக் கைது செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டார்.

அதன்படி கைது நடவடிக்கை தொடர்ந்த நிலையில் மீண்டும் ஓப்பன் மைக்கில் வந்த எஸ்.பி. கைது நடவடிக்கையை நிறுத்துமாறு உத்தரவிட்டார். ஆனபோதும் தங்களைக் குறிவைத்து நடக்கும் கைதுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்.

இதற்கிடையே ஜூன் 11ஆம் தேதி இரவு குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்து மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசினார்கள் மர்மநபர்கள். இதுபற்றி போலீஸார் விசாரித்து வந்த நிலையில் மறுநாள் ஜூன் 12ஆம் தேதி இரவு பண்ருட்டி அருகில் பணிக்கன்குப்பம் சந்தைத்தோப்பில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்படும் நேரமான இரவு 9.50க்கு மணிக்கு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் மது அருந்தச் சென்ற கண்ணன் என்பவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நடந்த அடுத்த பத்து நிமிடத்தில் கடலூர் மாவட்டம் வடலூர் அருகில் கருங்குழி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது.

இப்படி அடுத்தடுத்து நடக்கும் வெடிகுண்டு சம்பவங்களால் கடலூர் மாவட்ட மக்கள் பீதியில் இருக்கிறார்கள். போலீஸ் தரப்பில் விசாரித்தால், “வேல்முருகன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியினர்தான் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்’’ என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் தவாக நிர்வாகிகளோ, “எங்கள் தலைவர் வேல்முருகனை கைது செய்த போலீஸாருக்கு, வடமாவட்டங்களில் எங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் கைது செய்து கட்சியின் செயல்பாட்டை முடக்குமாறு எங்கிருந்தோ உத்தரவு வந்துள்ளது. அதனால்தான் வெடிகுண்டு சம்பவங்களோடு எங்கள் கட்சியினரை முடிச்சு போடும் வேலை நடக்கிறது’’ என்கிறார்கள்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon