மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

எஸ்.வி.சேகர் குறித்துப் பேச அனுமதி மறுப்பு!

எஸ்.வி.சேகர் குறித்துப் பேச அனுமதி மறுப்பு!

சட்டப்பேரவையில் எஸ்.வி. சேகர் குறித்து பேசுவதற்குச் சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகச் சித்தரிக்கும் வகையில் முகநூலில் கருத்து பதிவிட்ட பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மத்தியக் குற்றப் பிரிவு காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதும் முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. எனினும் இதுவரை எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுவருகிறார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் எஸ்.வி. சேகர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 13) கேள்வி எழுப்பினார். போலீஸ் பாதுகாப்புடன் எஸ்.வி. சேகர் சுதந்திரமாகச் சுற்றிவருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேச முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார். இது தொடர்பாக ஸ்டாலின் மேற்கொண்டு பேசுவதற்கும் சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால், ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திரைப்பட நடிகர் எஸ்.வி. சேகர் பத்திரிகைத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் குறித்துத் தவறான வகையில் விமர்சனம் செய்திருந்தார். இது குறித்துப் பத்திரிகையாளர்கள் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த நிலையில் தலைமைச் செயலாளரின் உறவினராக உள்ள எஸ்.வி. சேகரைக் கைது செய்வதற்கு இந்த அரசு தயங்குகிறது.

அவர் தாராளமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவருகிறார். கடந்த 10ஆம் தேதி தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தனது வாக்கையும் பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளார். காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் அங்கு இருந்துள்ளனர். இந்தப் பிரச்சினையைச் சட்டமன்றத்தில் இன்று எழுப்பியபோது, பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. எனவே, இதைக் கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon