மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

யார்க்‌ஷயர் அணியில் டி வில்லியர்ஸ்?

யார்க்‌ஷயர்  அணியில் டி வில்லியர்ஸ்?

இங்கிலாந்தின் யார்க்‌ஷயர் அணியில் டி வில்லியர்ஸை விளையாட வைக்க முயற்சி நடப்பதாக அவ்வணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள நவீன கிரிக்கெட்டில் முக்கியமான ஒரு ஜாம்பவனாக அறியப்படுபவர் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ். தன் அசாத்தியமான ஆட்டத் திறனால் உலக கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்ட அவர், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு எனும் முடிவை கடந்த மாதத்தில் அறிவித்தார். ரசிகர்களுக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும், தொடர்ந்து மற்ற டி-20 போட்டிகளில் ஆட விருப்பமுள்ளதாக அவர் சொன்னது சற்று ஆறுதலாகவே இருந்தது.

இந்நிலையில், அவரை இங்கிலாந்து யார்க்‌ஷயர் அணியில் விளையாட வைக்க வேண்டும் எனும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார் அந்த அணியின் இயக்குநர் மார்ட்டின் மோக்ஸான்.

அதுகுறித்து பேசும்போது,“டி வில்லியர்ஸை எங்கள் அணியில் விளையாட வைக்க எங்களுக்கு விருப்பமாக உள்ளது. அவரது மனதில் இந்த நிமிடம் வரைக்கும் என்ன எண்ணம் உள்ளது என எங்களுக்குத் தெரியாது. டி-20 போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் எனச் சொல்லப்படுவதாலேயே அவரை தற்போது அணுகிவருகிறோம்” என்றார் மார்ட்டின் மோக்ஸான்.

மேலும்,“அவரது மேனேஜரிடம் இது குறித்து கேட்டோம். ஆனால், இன்னும் ஓராண்டுக்குப் பிறகே கிரிக்கெட் ஆடுவது பற்றிய முடிவை டி வில்லியர்ஸ் எடுக்கவுள்ளதாக உள்ள முடிவைச் சொன்னார். எனவே, காலம் கைகூடி வரும் நேரத்தில் எங்களது அந்த விருப்பம் நிறைவேறும் என நம்புகிறோம்” என்றும் மார்ட்டின் குறிப்பிட்டார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon