மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

முழுப் பங்குகளையும் விற்கத் திட்டம்!

முழுப் பங்குகளையும் விற்கத் திட்டம்!

அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவிகிதப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குச் சுமார் ரூ.50,000 கோடிக்கு மேல் கடன் சுமை உள்ளது. கடனில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து கடனிலிருந்து விடுபடும் முயற்சியில் மத்திய அரசு நீண்ட நாட்களாகவே முயன்று வருகிறது. ஏர் இந்தியாவின் 5 துணை நிறுவனங்களின் பங்குகளையும் விற்பனை செய்ய நிதி ஆயோக் பரிந்துரை செய்திருந்தது. ஏர் இந்தியாவின் 76 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்து, பங்குகளை வாங்க விண்ணப்பிப்பதற்கு மே 14 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பங்குகளை வாங்க யாரும் முன்வராத காரணத்தால், மே 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க ஒருவர் கூட முன்வரவில்லை.

எனவே, ஏர் இந்தியா முழுவதையும் தனியாருக்கு விற்றுவிட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் டெல்லியில் ஜூன் 12ஆம் தேதி புளூம்பெர்க் ஊடகத்திடம் பேசுகையில், “ஏர் இந்தியாவின் குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்பனை செய்ய முன்வந்தும் எவரும் வாங்க முன்வரவில்லை. வேறு ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏர் இந்தியாவின் 24 சதவிகிதப் பங்குகளை மத்திய அரசே வைத்திருக்கும் என்ற முடிவை மாற்றிக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். மே மாத இறுதி வரையில் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க யாரும் முன்வராததால் அதன் 100 சதவிகிதப் பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான புதிய கொள்கை ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon