மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

காங்கிரஸ் தீண்டத்தகாததல்ல: கம்யூனிஸ்ட் !

காங்கிரஸ் தீண்டத்தகாததல்ல: கம்யூனிஸ்ட் !

தெலங்கானா மாநிலத்தில் பாஜக மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளைத் தோற்கடிப்பதற்காக, அதே எண்ணம் கொண்ட கட்சிகள் அனைத்தும் மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணியில் இணையுமென்று தெரிவித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி தீண்டத்தகாததல்ல என்றும் கூறியுள்ளது.

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை அம்மாநிலத்தில் மேற்கொண்டு வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. நேற்று (ஜூன் 12) நிஜாமாபாதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சதா வெங்கட் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் தேர்தலை எதிர்கொள்ள மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணியை அமைக்கப் போவதாகக் கூறினார்.

“பாஜக, மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளைத் தோற்கடிக்கும் எண்ணமுள்ள கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியில் திரட்ட முடிவெடுத்துள்ளோம். இதனால் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மற்றும் தெலங்கான ஜன சமிதி கட்சிகளோடு இணையும் வாய்ப்புள்ளது. தற்போது, பிரச்சினைகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டங்களில் இணைந்து கலந்துகொண்டு வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைப்பது பற்றி, இப்போது எதுவும் கூற முடியாது. எங்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தீண்டத்தகாத கட்சியல்ல” என்று தெரிவித்தார் வெங்கட் ரெட்டி.

கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். ப்ரீகேஜி முதல் கல்லூரிப்படிப்பு வரை இலவசமாகத் தருவதாக அறிவித்துவிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கணக்குவழக்கில்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கண்டனம் தெரிவித்தார்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் தேர்தலை மையப்படுத்தியே இருப்பதாகவும், அவற்றினால் ஏழைகளின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லையென்றும் கூறினார் வெங்கட் ரெட்டி.

தெலங்கானா மாநிலத்தில் பாஜக மற்றும் டிஆர் எஸ் கட்சிகளைத் தோற்கடிக்கும் வகையில் இடதுசாரிகள் அமைக்கும் அணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெறக்கூடும் என்ற கருத்து, தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon