மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

காலாவுக்கு ஆதரவாக குஜராத்தில் ஒரு குரல்!

காலாவுக்கு ஆதரவாக குஜராத்தில் ஒரு குரல்!

அதிகாரவர்க்கத்தை மிக நுட்பமாக எதிர்க்கும் படம் காலா என குஜராத் மாநில எம்.எல்.ஏ.வும் தலித் ஆதரவு போராளியுமான ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் காலா. இந்தப் படம் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின் வெளியான திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியானது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இரு தரப்பு விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று நான் காலா திரைப்படம் பார்த்தேன். நானும் காலாவாகவே உணந்தேன். மிகச் சிறந்த படம். எனது சகோதரர் ரஞ்சித் மற்றுமொரு சிறந்த படத்தைத் தந்திருக்கிறார். இத்திரைப்படம் அதிகாரவர்க்கத்தை மிக நுட்பமாக எதிர்த்துள்ளது. அதே வேலையில் படத்தை ஜனரஞ்சகமாகவும் தந்திருக்கிறார். ரஞ்சித், உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். நீங்களும் (மக்கள்) காலாவைப் பருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜகவின் இந்துத்துவா திணிப்புக்கு எதிராக குஜராத்தில் பல லட்சம் தலித்துகளை அணி திரட்டி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத் தேர்தல் களத்தில் பெரியார் பெயரை உச்சரித்து வாக்கு சேகரித்தார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜிக்னேஷ் மேவானி வருகை தந்தார். குடிசை வாழ் மக்களுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து மனு அளித்தார். இதைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக பா.ரஞ்சித், ஜிக்னேஷ் மேவானி இருவரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon