மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ரத்த தானத்துக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

ரத்த தானத்துக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

ரத்த தானத்தின்போது நோயாளிகள், கொடையாளிகள் இருவரும் பயன்பெறும் நோக்கில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே இனி ரத்த தானம் செய்ய முடியும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உதாரணமாக, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பெண்மணி, குழந்தை பிறந்த அடுத்த 12 மாதங்கள் வரை ரத்த தானம் செய்யக் கூடாது. கருக்கலைப்பு செய்த ஆறு மாதங்களுக்கும்; தாய்ப்பால் கொடுப்பது மற்றும் மாதவிடாய் காலங்களிலும் ஒரு பெண் ரத்த தானம் செய்ய முடியாது. `ரத்த வங்கிகள்' என்ற பெயரை `ரத்த மையங்கள்' என பெயர் மாற்றம் செய்யவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்தப் புதிய கட்டுப்பாடுகளுக்கான ஒப்புதல், தற்போது மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்திடமிருந்து கிடைத்துள்ளது. விரைவில் இதில் உள்ள மாற்றங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய விதிகளின்படி, மலேரியாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் குணமடைந்த மூன்று மாதங்கள் கழித்தும்; டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்த ஆறு மாதங்கள் கழித்தும்; ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்த நான்கு மாதங்கள் கழித்தும் ரத்த தானம் செய்யலாம். சிறிய அல்லது பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டவர்கள் குணமடைந்து 6 முதல் 12 மாதங்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon