மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

கர்நாடகாவின் பிட்னஸ் மீது அக்கறை: குமாரசாமி

கர்நாடகாவின் பிட்னஸ் மீது அக்கறை: குமாரசாமி

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்று வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இதேபோல, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் தனது வீடியோவினைப் பதிவிட வேண்டுமென சவால் விடுத்தார். இதற்குப் பதிலளித்துள்ள குமாரசாமி, கர்நாடகாவின் பிட்னஸ் பற்றியே தான் அதிகம் அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த மாதம் தனது வீடியோ ஒன்றைச் சமூக வலைதளமொன்றில் வெளியிட்டார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதுபோல, ஒவ்வொருவரும் தாங்கள் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிட வேண்டுமெனக் கூறியிருந்தார். இந்த சவாலில் இணையுமாறு கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா, நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்ற விராட் கோலி தனது பிட்னஸ் வீடியோவை வெளியிட்டார். இந்த சவாலை ஏற்குமாறு, அவரது மனைவி அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்பதாக அறிவித்த மோடி, இன்று (ஜூன் 13) காலை தனது பிட்னஸ் வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். சுமார் 1.49 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், அவர் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நடப்பது, பாறையின் மீது சாய்வது, கூழாங்கற்களின் மீது நடப்பது, மூச்சுப் பயிற்சி போன்றவற்றைச் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. யோகா தவிர, உடற்பயிற்சிகள் தனக்குப் புத்துணர்ச்சியைத் தருவதாகக் குறிப்பிட்ட மோடி, இயற்கையின் ஐந்து தத்துவங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் அடிப்படையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடப்பதாகக் கூறினார்.

“இந்த பிட்னஸ் சவாலை ஏற்குமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீராங்கனை மனிகா பத்ரா மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட தைரியமான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு இந்தியரும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தைத் தனது உடலைப் பேணச் செலவழிக்க வேண்டுமென்று கூறினார். தங்களுக்கு வசதியான உடற்பயிற்சிகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டுமென்றும், இதனால் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதைக் காண முடியும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

இதற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் உடனடியாகப் பதிலளித்தார் குமாரசாமி. தனது உடல்நலனில் அக்கறை கொண்டதற்காக, மோடிக்கு நன்றி தெரிவித்தார். “உடல் கட்டுக்கோப்பாக இருப்பது முக்கியம் என்பதால், இதனை ஆதரிக்கிறேன். யோகா செய்வதையும், ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதையும் தினமும் மேற்கொண்டு வருகிறேன். இருந்தாலும், எனது மாநிலத்தின் பிட்னஸ் வளர்ச்சி பற்றியே அதிகம் அக்கறை கொண்டிருக்கிறேன்; அதற்கு, உங்களது ஆதரவை வேண்டுகிறேன்” என்று அவர் கூறினார்.

இதற்கு மோடியின் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வெளியாகவில்லை.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon