மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

வாட்ஸ் அப் காலுக்குத் தடை!

வாட்ஸ்  அப் காலுக்குத் தடை!

வாட்ஸ் அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய உள் துறை அமைச்சகம் ஆலோசனை செய்துவருகிறது.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கேற்றவாறு அவற்றின் சிறப்பம்சங்களும் மாறிக்கொண்டேவருகின்றன. அதாவது, வாட்ஸ் அப்பில் மெசேஜ், ஆடியோ, வீடியோ கால் உள்ளிட்டவை அடங்கும்; இதுவே நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவும் காரணமாக அமைந்துவிடுகிறது. தேசத்துக்கு விரோதமாகச் செயல்படுபவர்களுக்கு வாட்ஸ் ஆப் மிக உதவியாக இருக்கிறது. அதனால், வாட்ஸ் அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியைத் தடை செய்ய அரசு ஆலோசனை செய்துவருகிறது.

இது குறித்து டெல்லியில் உள் துறை செயலாளர் ராஜீவ் கியூபா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கைதான பயங்கரவாதிகள் அளித்த தகவலின்படி, 2016ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் குறித்த திட்டங்களை தங்களது கூட்டாளிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவித்ததாக கைதானவர்கள் கூறினர்.

இணைய அடிப்படையிலான சேவையில் end-to-end encryption என்ற முறை இருப்பதால், பாதுகாப்பு நிறுவனங்களால் அவர்களை அடையாளம் காண முடியாது. அதனால்தான், வளைகுடா நாடுகளில் வாட்ஸ் அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி தடை செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் செயல்கள் மட்டுமில்லாமல், மதவாதப் பிரச்சினைகள் குறித்தும் வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவிவருகின்றன. அதனால் வாட்ஸ் அப்பின் தலைமையிடம் வேறு நாடாக இருந்தாலும், அதை இந்தியச் சட்டங்களின் கீழ் கொண்டுவருவது நல்லது என ஆலோசிக்கப்பட்டது.

வாட்ஸ் அப் சிறப்பம்சங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறுவது முதல் முறை கிடையாது. 2016ஆம் ஆண்டே இதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுதிர் யாதவ் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதில் வாட்ஸ் அப் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது; அதனால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வேண்டுமானால் அரசிடம் அணுகலாம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon