மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ஏர்செல் - மேக்சிஸ்: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்?

ஏர்செல் - மேக்சிஸ்: சிபிஐ  குற்றப்பத்திரிகை தாக்கல்?

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று (ஜூன் 13) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக, கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனமாகக் கருதப்படும் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்து, பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பரில் முடக்கியது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஜூலை 10ஆம் தேதிவரை கைது செய்ய நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “குற்றப்பத்திரிகை முன்னரே தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சிபிஐயில் உள்ள சில அதிகாரிகள் சிதம்பரத்துக்கு உதவ முயற்சிக்கின்றனர். சில அமைச்சர்கள் கூட அவருக்கு உதவுகின்றனர். தற்போது பிரதமர் மோடி இவை அனைத்தையும் தடுத்து நிறுத்திவிட்டார். எந்தக் குறுக்கீடும் இல்லாமல் சொந்தமாக முடிவெடுக்கும்படி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், சிதம்பரத்துக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அமலாக்கத் துறை முன்பு சிதம்பரம் மீண்டும் ஆஜராக வேண்டும். அவர் தொடர்ந்து பொய் கூறிவருகிறார். ஆனால் பிடிபடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக நேற்று (ஜூன் 12) அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு சிதம்பரம் ஆஜராகி இருந்தார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் சிதம்பரத்தை ஜூலை 10ஆம் தேதி வரை கைது செய்வதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon