மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

கடினமான பாடம் கணிதம்: ஆய்வு!

கடினமான பாடம் கணிதம்: ஆய்வு!

நாடு முழுவதும் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மாணவர்களுக்குக் கடினமான பாடம் கணிதம் என்பது தெரியவந்துள்ளது.

பள்ளிகளில் தேர்வு என்றாலே மாணவர்களில் பலர் பதற்றத்துடன் காணப்படுவார்கள். அதுவும் கணிதம், அறிவியல் பாடங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.

இந்த நிலையில் கியூமேத் என்ற தனியார் நிறுவனம், நாடு முழுவதும் சுமார் ஆயிரம் பெற்றோர்களிடையே ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் 89 சதவிகித பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கணிதப் பாடம் கடினமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 71 சதவிகித பெற்றோர்கள் பள்ளிகளில் கணிதப் பாடத்தை சரியாகக் கற்பிக்காததாலேயே மாணவர்களுக்கு அப்பாடம் கடினமாக இருப்பதாகவும் அதனால் தனியே டியூஷனுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தவிர 61 சதவிகித பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கணிதத் தேர்வுக்கு முன்பே பதற்றமடைந்துவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

81 சதவிகிதப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முதலில் கணிதப் பாடத்துக்கும் அடுத்தபடியாக அறிவியல் பாடத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கணிதப் பாடத்தில் பிள்ளைகளின் செயல்பாட்டை தேர்வு மூலம் பெறும் மதிப்பெண்களை வைத்தே 61 சதவிகித பெற்றோர்கள் முடிவு செய்வதாகவும், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இயற்கையாகவே கணிதத்தில் சிறந்து விளங்குவதாகவும் கூறியுள்ளனர் என்று இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon