மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ஆதாருடன் ஓட்டுநர் உரிமம்: அரசு ஆலோசனை!

ஆதாருடன் ஓட்டுநர் உரிமம்: அரசு ஆலோசனை!

ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அது தவிர, பான் கார்டு, சிம் கார்டு, வங்கிக் கணக்கோடும் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி வருகிறது மத்திய அரசு.

பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ளனர். விதிகளை மீறும்போது ஓர் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போலி பெயர்களிலும் ஓட்டுநர் உரிமங்கள் வாங்கிக் கொள்கிறார்கள், இவ்வாறு ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதைத் தடை செய்யும் வகையில், ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர், ”ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். அப்படி இணைக்கும்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டு, வெளியூருக்கு ஓடிச் செல்வோர்களை எளிதில் பிடிக்க முடியும். ஏனெனில், ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், கைரேகையை எப்படி மாற்ற முடியும்?” எனச் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டத் துறை அமைச்சர் கூறியிருந்தார். வங்கிக் கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தைக் கால வரையறையின்றி நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon