மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்!

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று முன்தினம் திடீரென்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்ட எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், அதன்பிறகு வெளியிட்ட அடுத்தடுத்த அறிக்கைகளில், “வாஜ்பாய்க்கு சிறுநீர் பாதைத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், ஊசி மூலம் அவருக்கு ஆன்டிபயாடிக்குகள் செலுத்தப்படுகிறது. நோய் தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை அவர் மருத்துவமனையில் இருப்பார்” என்றும் கூறியது.

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். நேற்றிரவு எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வாஜ்பாய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுபோலவே முன்னாள் பிரதமர் தேவ கவுடா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று வாஜ்பாய் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

இந்தியா டுடே இணையதளத்துக்கு பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி அளித்த பேட்டியில், “வாஜ்பாய்க்கு நேற்று (நேற்று முன்தினம்) முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். வாஜ்பாயின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரைச் சந்திக்க யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை. அவரது நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால், பார்வையாளர்கள் அவரை அறையின் கண்ணாடி வழியாக மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், “வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நன்றாக ஒத்துழைக்கிறது. மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாஜ்பாய் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் கருத்திட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வாஜ்பாய் விரைவில் உடல்நலம் பெற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று பழைய நிலைமைக்குத் திரும்ப வேண்டும் என்று திமுக மற்றும் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருமைத் தலைவர் வாஜ்பாய் அவர்களின் உடல்நலம்பற்றி கேட்டறிந்தேன். பன்னெடுங்காலமாக அவரோடு இணைந்து பணியாற்றியது மட்டுமல்லாமல் இன்றும் அவரோடு மருத்துவமனையில் உடனிருக்கும் விஜய்கோயல் அவர்கள் வாஜ்பாய் நலமுடனிருப்பதாக என்னிடம் தெரிவித்தார்” என்று எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுவந்த பிறகு தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

வாஜ்பாயின் உடல்நலம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுவும் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாஜ்பாய் விரைவில் நலம் பெற்று வீட்டுக்கு ஆரோக்கியமாகச் செல்ல வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon