மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

பாம்பனில் சூறைக்காற்று: ரயில்கள் நிறுத்தம்!

பாம்பனில் சூறைக்காற்று: ரயில்கள் நிறுத்தம்!

பாம்பனில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் சென்னை, மதுரை ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 11ஆம் தேதியன்று பாம்பன், எண்ணூர், நாகை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கதேசம் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகப் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாம்பனில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் சென்னை - ராமேஸ்வரம் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் ரயில்கள் பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், தெற்கு அரபிக் கடல், வங்கக் கடலில் அதிகக் காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொண்டி, பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு நாட்களாக தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தைவிடப் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதால் நீண்ட உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. இதன் காரணமாக நேற்று (ஜூன்12) சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon