மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

இந்தியன் - 2: ரகசியம் உடைபட்டது!

இந்தியன் - 2: ரகசியம் உடைபட்டது!

இந்தியன் 2 திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியாகிவிட்டது. ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் இணைந்திருக்கும் படத்துக்கும், கமல் - ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்துக்கும் ஒரே சமயத்தில் இசையமைக்கும் வாய்ப்பை அனிருத் பெற்றிருக்கிறார். இந்த முக்கியமான தகவலை, எவ்வித பில்டப்பும் இல்லாமல் சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. ஏனென்றால், வெளியான தகவலைவிட அது வெளியான முறை கூடுதல் சுவாரஸ்யமானது. அனிருத், ஷங்கர் படத்தில் இசையமைப்பார் என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும், அது இந்தியன் -2 படத்திலேயே நடைபெற்றிருப்பது கொஞ்சம் அதிர்ச்சி.

வெங்கட் பிரபுவின் உதவியாளர் சரவண ராஜன் இயக்கியிருக்கும் 'ஆர்.கே.நகர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (12.06.18) மாலை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு தயாரித்திருப்பதால், படத்தின் புரமோஷனுக்காக அனிருத் அழைக்கப்பட்டிருந்தார். அனிருத் விழாவில் பேசும்போது, ஏதாவது சுவாரசியம் ஏற்படும் எனக் காத்திருந்தவர்களுக்கு, வெங்கட் பிரபுவின் பேச்சிலேயே தகவல் தெரியவந்தது.

“என் ஒரு அசிஸ்டண்ட் ரஞ்சித்தின் படம் வெளியாகிவிட்டது. அடுத்து சக்தி சௌந்தரராஜனின் டிக் டிக் டிக், இப்போது சரவண ராஜனின் ஆர்.கே.நகர். இந்தப் படமும் மாத இறுதிக்குள் திட்டமிட்டபடி ரிலீஸாகிவிட்டால் ஒரே மாதத்தில் மூன்று அசிஸ்டண்ட்களின் படங்கள் ரிலீஸான சந்தோஷம் எனக்குக் கிடைக்கும்” என்று தனது களிப்பான நிலையை வெளிப்படுத்தியவர், அதே மகிழ்ச்சியுடன் அனிருத் பக்கம் திரும்பினார்.

“அனிருத்தின் பிஸியான ஷெட்யூலுக்கு நடுவே இந்த விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்ததற்கு ரொம்ப நன்றி. நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன். அவரது வளர்ச்சியைப் பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒரே சமயத்தில் ரஜினி படத்துக்கும், கமல் படத்துக்கும் இசையமைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது” என்று அவர் சொன்னதுதான் தாமதம். பிரசாத் லேப் வெளியே இருந்தவர்கள் அலறும் அளவுக்கு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon